வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கிடையாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத் தேதிக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள முன்பதிவுக் காலத்திற்குள் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
தற்போது நாடு முழுவதும் 3 ஜோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை:
ரயில் எண் 27575/27576 – ஹவுரா – காமாக்யா – ஹவுரா.
ரயில் எண் 27421/27422 – வாரணாசி – புதுடெல்லி – வாரணாசி.
ரயில் எண் 27651/27652 – பெங்களூரு (SMVT) – மும்பை (CSMT) – பெங்களூரு.

இந்த ரயில்களில் தட்கல் ஒதுக்கீடு கிடையாது என்றும், அனைத்து படுக்கைகளும் பொது முன்பதிவுப் பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சிவம் சர்மா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயிலின் சிறப்பம்சங்கள்
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் (ICF) தொழில்நுட்ப உதவியுடன், பிஇஎம்எல் நிறுவனம் இந்த ரயிலை உருவாக்கியுள்ளது. மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 11 ஏசி 3 அடுக்கு பெட்டிகள், 4 ஏசி 2 அடுக்கு பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி என மொத்தம் 823 பயணிகள் பயணிக்கலாம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அவசியம்
இந்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். RAC, காத்திருப்புப் பட்டியல் மற்றும் பகுதி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன் பயணிக்க அனுமதி கிடையாது.
டிக்கெட் ரத்து விதிமுறைகள்
பயணிகள் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது, ரயில் புறப்படும் நேரத்தைக் கணக்கிட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படும்.
72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
72 மணி நேரம் முதல் 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ரத்து செய்தால், கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
இதற்கிடையே, நவம்பர் 3-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பெங்களூரு – மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் 31-ம் தேதி பெங்களூரு SMVT ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.