சென்னை:

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை வலிங்குகள் நல வாரியம் எதிர்க்காது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்த சட்டத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவிக்காது. இந்த வாரியம் சார்பில் எந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இல்லை.
மத்திய அரசும், பாஜ.வும் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தான் இருக்கும். ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் மற்றொரு முறை அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசால் இயலாது. எனினும் இந்த நடவடிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்தது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “சென்னை மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசிய கொடியை எரித்தும், பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த தேச விரோத கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதற்கு தேச விரோத சக்திகள் ஊடுறுவியது தான் காரணம். தேசிய கொடியை எரித்தவர்கள், அவமதித்தவர்ளை தேச விரோத சட்டத்தின் கீழ் தான் அடையாளப் படுத்த வேண்டும். பிரதமர் என்ற பதவி மதிக்கப்பட வேண்டும். இதற்கு முன் அந்த பதவியில் பலர் இருந்துள்ளனர். இப்போது மோடி இருக்கிறார். இதற்கு முன்னும் பலர் இருந்திருக்கிறார்கள். அந்த பதவி மதிக்கப்பட வேண்டியது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மெரினா கவலவரத்தின் போது, காவல்துறையினர் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். இதில் காவல்துறையினர் மக்களை குறி வைக்க கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழக மக்களிடம் காங்கிரஸ் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்கள் தான் காட்சிப்படுத்தப்பட கூடாத விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கும் அறிவிப்பை 2011ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நாடாளுமன்ற நடைமுறைக்கு உட்பட்டது. இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தான் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
தமிழக வறட்சி பாதிப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, “ தமிழக வறட்சி பாதிப்பை மத்திய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதை பிரதமர் மோடி வழிநடத்தி வருகிறார். எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படாது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.