கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருதேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 12ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ஆன்மிகம் தழைத்தோங்கும் தமிழ்நாட்டில் சிதம்பரம் நடராஜன் கோவில் பெரும் புகழ் பெற்றது. சிதம்பரம் நடராஜர் (சிவன்)  கலாச்சார வரலாற்று பார்வையிலும், வரலாற்று முன்னோடிகளிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இப்போது மேற்கு நாட்டு விஞ்ஞானிகளும் நடராஜரின் பெருவிரலை உலகின் காந்த மின்புலத்தின் மைய மையமாகக் கொண்டு உள்ளது என்று நிரூபித்துள்ளனர்.

 சிதம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது.  நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம் (COSMIC DANCE) என்று பல ஆய்வுகளால் கருதப்படுகிறது. நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், வானைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகிய மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்கரேகையில் அமைந்துள்ளன.

இன்றைய அறிவியல் கருவிகள் உதவியுடன் நாம் பார்ப்பதை, அக்காலத்தில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமாகும். இது இந்து மதத்தின் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் ‘உச்சகட்ட அதிசயம்’ என்றால் அது மிகையாகாது.

இவ்வளவு புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் அனி மாத திருமஞ்சன விழா புகழ் பெற்றதாகும்.  சிதம்பரம்  நடராஜப் பெருமான் கோவிலையே குறிக்கும். பொதுவாக வருடத்தில் 6 முறை மட்டுமே அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவற்றில் மார்கழி மாத திருவாதிரைக்கு பிறகு, சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது ஆனி திருமஞ்சனம் ஆகும். ஆனி திருமஞ்சன நாளிலேயே நடராஜப் பெருமான், சிவகாம சுந்தரி அம்மையுடன் ஆனந்த திருநடனம் ஆடி தேவர்களுக்கும், பதஞ்சலி முனிவருக்கும் திருக்காட்சி அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளில் தேவர்கள், சிதம்பரம் நடராஜருக்கு பூஜைகள் செய்த வழிபடுவதாக ஐதீகம்.

ஆனி மாதம் உத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தையே ஆனி திருமஞ்சனம் என்கிறோம். விவசாயம் செழிப்பதற்காகவும், வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விழா நடத்தப்படுகிறது.   10 நாட்கள் விழா நடைபெறும் இந்த நாளில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருத்தேரோட்டம் நடத்தப்படும். இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.

இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜூலை 11ம் தேதி பகல் 01.47 துவங்கி, ஜூலை 12ம் தேதி மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது.

இந்த ஆண்டு ஆனி உத்திர நட்சத்திர நாளில் வளர்பிறை சஷ்டியும் இணைந்து வருவதால் இது சிவ பெருமான் மட்டுமின்றி முருகப் பெருமானையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து காலையில் கோவில்களில் நடக்கும் நடராஜர் அபிஷேகத்தை தரிசனம் பண்ணலாம்.