திரைப்பட இயக்குநர் அமீர், “500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடியை பாராட்டும் ரஜினி, தான் நடித்த “கபாலி” படத்தின் உண்மையான வசூல் என்ன என்பதை வெளியிடுவாரா” என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
திடீரென ரஜினி மீது அமீர் காட்டம் காட்டுவது ஏன் என்று திரைப்பட வட்டாரத்தில் விசாரித்தோம்.
பலர் ஒதுங்க, சிலர் பேசினார்கள்.
அவர்கள் தெரிவித்த தகவல்கள் இதுதான்:
“ நடிகர் ரஜினி மீது பல காலமாகவே விமர்சனம் உண்டு. “ஒரு பவுன் வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்த தமிழகம் அல்லவா” என்று பாட்டே பாடிய ரஜினி, தமிழகத்துக்கு என்ன செய்தார்? தமிழக மக்களின் பிரச்சினைகளாக்காக இதுவரை குரல் கொடுத்திருக்கிறாரா? என்று ரஜினி மீது பல கேள்விகள் பல காலமாகவே உண்டு.
ஆனால் அப்போதெல்லாம் அமீர் வாய்மூடியே இருந்தார். அது மட்டுமல்ல, ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வரவேண்டும்” என்று போற்றிப் புகழ்ந்தவர்தான் அமீர்.
அந்த நிகழ்ச்சியில் அமீர்,
“பத்து வருடங்களுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எதுவுமே பேசாமல் இப்போதும் அதே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் ரஜினி.
இன்று காலை வரும் போது கோட்டை பின்னாடி தள்ளிவிட்டு நடந்து வருவது போல ஒரு ரஜினி ஸ்டில் பார்த்தேன். என் பின்னால நிக்காதீங்கடா, தள்ளிப் போங்கடா என்று ரஜினி கூறுவது போலவே இருந்தது.
சூப்பர் ஸ்டார் அவர்களே… இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இப்போது இருக்கிறீர்கள். இன்னும் 10 வருடங்கள் கழித்து உலகத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பீர்கள்.
நீங்கள் தமிழக சி.எம். (முதல்வர்) ஆகவேண்டும். உங்கள் படத்தில் வரும் வசனங்களை நீங்கள் பேசவில்லை என்கிறீர்கள். இயக்குநர்கள் எழுதுவதை பேசுவதாக கூறுகிறீர்கள்.
எங்கே.. உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்… இது சரிதானா? உங்க மனதில் இருப்பதை தான் ஒவ்வொரு இயக்குநரும் எழுதுகிறார்கள்.
‘லிங்கா’ படத்தின் ட்ரைலரில் ஒப்பனிங் காட்சியில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். அடபதான் இங்க இருக்கிற எல்லோரின் ஆசையும். நாங்கள் முப்பது வருடங்களாக உங்கள் ஒருவர்ர் மீதுதான் மாறாத நம்பிக்கை வைத்துள்ளார்கள்
விமர்சனத்தை எல்லாம் தூக்கி ஏறியுங்கள். தமிழக மக்களுக்கு ஏதாவது நல்ல செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் கொடுங்கள்… நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால் வந்து விடுகிறோம். உங்களிடம் மட்டும்தான் கேட்க முடியும். வேறு யாரிடம் போய் கேட்க முடியும். எனக்கு தெரிந்து நான் வேறு யாரையும் தலைவர் என்று சொல்லியதில்லை” என்றார் அமீர்.
இப்படி இவர் பேசுவதற்கு முன்பே ரஜினி மீது பல விமர்சனங்கள் உண்டு. அதெல்லாம் அமீருக்குத் தெரியாதா?
அமீருக்கு ரஜினி மீது கோபம் ஏதும் கிடையாது. அவருக்கு பிரதமர் மோடி மீது வெறுப்பு. ஆகவே மோடியை ஆதரித்த ரஜினியை விளாசுகிறார். இவர் நியாயவாதியாக இருந்தால், “கபாலி” பட ரிலீஸின் போதே இந்த கேள்வியை எழுப்பியிருக்கலாமே.
அமீருக்கு பா.ஜ.க., மோடி மீதுதான் ஆத்திரம் என்பதை விளக்கவும் ஒரு சம்பவம் இருக்கிறது.
காவிரி பிரச்சினை பெரிய அளவில் எழுந்தபோது, “கர்நாடகா தமிழக மாநில பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களுக்கிடையே சுமுகமான சூழல் ஏற்பட ரஜினி உதவுவார்“ என்று பாஜக தமிழக தலைவர் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சொன்னார். அப்போது இதே அமீர் “ஓட்டுக்கேட்க நீங்கள் வருவீர்கள். பிரச்சினையை தீர்க்க ரஜினி வருவாரா? வெட்கமாக இல்லையா. எப்படி வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் இப்படி பேசுகிறீர்களே” என்று பொது மேடையிலேயே பாஜகவின் தமிழிசையை பின்னி எடுத்தார்.
ஆகவே அமீரின் ஆத்திரம் யார் மீது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்” என்றவர்கள் மேலும் கூறியதாவது:
“அமீரின் பேச்சுக்களை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஆவேசமாக பேசுவார். பிறகு மன்னிப்பும் கேட்பார். அது அவரது சுபாவம்.
தமிழில் பெயர் வைக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்று முன்பு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
உடனே பிரபல வார இதழ் ஒன்றில் இந்த அறிவிப்பை காட்டமாக எதிர்த்து பேட்டி கொடுத்தார் அமீர். பிறகு யாருடைய நெருக்குதலுக்கோ பயந்து தான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
அவர் பேசியதற்கான ஆதாரம் இருந்தும், அந்த வார இதழ் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டது. இதுதான் அமீரின் பாணி. தன்னை ஏதோ புரட்சிக்காரன் போல காட்டிக்கொள்ளும் பிழைப்புவாதி அவர்.
நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியை ரஜினி பாராட்டியது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை சொல்லும் அருகதை அமீருக்கு கிடையாது”” என்று காட்டமாக கூறினார்கள் நம்மிடம் பேசியவர்கள்.
மேலும் அவர்கள் , “தன் மீதான விமர்சனங்களை தன் காற்சட்டையில் படும்தூசி போல உதறுபவர் ரஜினி. ஏற்கெனவே அவரை மிகக் கடுமையாக பேசிய மனோரமா, மன்சூர் அலிகான் ஆகியோருக்கு தனது அடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்தவர் ரஜினி. அதன் மூலமே அவர்களை அடக்கியவர். அதே போல அமீருக்கும் வாய்ப்பு கொடுப்பார். ஒருவேளை அமீரும் இதைத்தான் எதிர்பார்க்கிறாரோ என்னவோ” என்றார்கள்.
அமீரின் தரப்பை அறிய அவரது எண்ணை தொடர்புகொண்டோம். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. மீண்டும் அவரை தொடர்புகொண்டு, அவரது விளக்கத்தை வெளியிட முயற்சிக்கிறோம்.