வேலுார் :
வேலுார் மாவட்டத்தில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் படித்த, 25 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் , ஆரம்ப பள்ளிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு உடல்நலம் குறித்து மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் குழந்தைகளின் இதயம் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனையில் மூச்சுத்திணறல் போன்ற இதய சம்பந்தமான பாதிப்புகள் உள்ள குழந்தைகள் கண்டறியபட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.
இதுபற்றி வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் உஷா சதாசிவம் கூறியதாவது:
வேலுார் மாவட்டத்தில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், ரத்தக்குழாய் பாதிப்பு உள்ளிட்ட, இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் நோய் பாதிப்புக்குள்ளான 100 குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
அந்த குழந்தைகளை பரிசோதனை செய்ததில், 46 குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோருடன் ஆலோசனை செய்து, 46 பேரில். அதிக பாதிப்புள்ள, 25 குழந்தைகளுக்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர்கள் அனைவரும் வேலுார் அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு, அவர்களுக்கு பூரண குணமடையும் வரை, தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும்தான் இதுபோல ஓர் அரிய சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்