தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும், உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டி நடத்துபவர்களையும், கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்கின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

காவல்துறையையும் தனது வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இது குறித்து வாய் திறக்கவில்லை. (ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று சில நாட்கள் முன்பு சொன்னவர் இவர்தான்.)

ஆனால் ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. அங்கு காவல்துறையினர், இடையூறு செய்யவில்லை, தாக்கவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அம்மாநில போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

அம்மாநில  முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் சொந்த ஊரான நாராவாரபள்ளியில் இன்று தடையை மீறி போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்தனர்.