சென்னை:
தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சியில் 5 டிஎம்சி ஆந்திரா தந்துள்ளது.
தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திரா தர வேண்டும். குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். ஆனால், இந்த நீரை ஆந்திர அரசு இதுவரை முழுமையாக தந்ததில்லை. இந்த சூழலில் நடப்பாணடின் முதல் தவணை காலம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஆனால், ஆந்திர அரசு சார்பில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து ஆகஸ்ட் முதல்வாரத்தில் தமிழக அரசு தண்ணீர் திறக்க கோரி கடிதம் எழுதியது.
ஆனால், ஆந்திர அரசு மழை பெய்தால் தண்ணீர் தரப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு ஆந்திராவில் வெளுத்து வாங்கியது. இதனால், ஆந்திர மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், செப்டம்பர் 20ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தது.
ஆரம்பத்தில் 100 கன அடி வந்த நிலையில் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 636 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு வருகிறது. இந்த தண்ணீரில் 75 கன அடி வீதம் கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்துக்கும், மீதமுள்ள நீர் பூண்டி ஏரிக்கும் திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில் தற்போது வரை 4.97 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனாலும், 3 நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், 68 டிஎம்சி கொள்ளளவு ெகாண்ட கண்டலேறு அணையில் 56 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, அடுத்த தவணை காலத்தில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 4 டிஎம்சி நீரை முழுமையாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உட்பட 5 ஏரிகளில் 10.74 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை ெகாண்டு 10 மாதங்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இருப்பினும் நீர் பற்றாக்குறையை தவிர்க்க ஆந்திராவிடம் தண்ணீர் பெறப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.