ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனுமான மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா ஆந்திரா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

1923 ம் ஆண்டு மே 28 ம் தேதி கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த நந்தமூரி தாரக ராமாராவ் எனும் என்.டி.ஆர். 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த என்.டி.ஆர். தமிழில் கர்ணன் திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடமேற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியைச் துவங்கி அரசியலில் நுழைந்த என்.டி.ஆர். 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 95 வரையிலும் ஆந்திர மாநில முதல்வராக பதவி வகித்த அவர் 1996 ம் ஆண்டு ஜனவரி 18 ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

இவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஓராண்டு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு மே 28 ம் தேதி விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று என்.டி.ஆரின் மகளும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவருமான துக்காப்பட்டி புரந்தரேஸ்வரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி

தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வும் என்.டி.ஆரின் மகனும் நடிகருமான என். பாலகிருஷ்ணா என்.டி.ஆர். பிறந்த ஊரான நிம்மகுரு-வில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிம்மகுரு-வில் 30 அடி உயரத்தில் என்.டி.ஆருக்கு சிலை வைக்கப்படும் என்றும் அந்த ஊரை சுற்றுலா தலமாக மாற்ற இருப்பதாகவும் கூறினார்.

என். பாலகிருஷ்ணா

இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஜா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிருஷ்ணா மாவட்டத்திற்கு என்.டி.ஆர். மாவட்டம் என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் நன்றி கூட கூறவில்லை.

ரோஜா

1995 ம் ஆண்டு என்.டி.ஆரிடம் இருந்து ஆட்சியைப் பறித்து 1996 ல் அவரது மரணத்துக்கு காரணமான சந்திரபாபு நாயுடுவுக்கு அவரது பெயரைச் சொல்லவும் அவரது பிறந்த நாளைக் கொண்டாடவும் தகுதியில்லை என்று கூறியுள்ளார்.