ஐதராபாத்,
தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.
தற்போது தமிழகத்திலும் தேசிய அளவிலான நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல பெருகி வருகிறது.
ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்ட மாணவ மாணவிகள் குறித்த விசாரணையில், தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவிகள் பெரும்பாலோனோர் தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிக்கு சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தனியார் பயிற்சி மையங்களில் கொடுக்கப்படும் மன அழுத்தம், பெற்றோர்களின் நெருக்குதல் காரணமாகவே மாணவ மாணவிகள் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்யுக்தா என்ற மாணவி, மேல்நிலை தேர்வில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருந்தும், தேசிய தேர்வுகளில் வெற்றிபெற விரும்பி ஐதராபாத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.
ஆனால், பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்ட பாடங்கள், நெருக்குதல்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்து கொண்டார். தனக்கு வழங்கப்படும் பாடங்களை எதிர்க்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்து உள்ளார்.
இதுபோல தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த 2 மாதங்களில் 50க்கம் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர்கள் பரும்பாலான மாணவர்கள் அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற முடிவை எடுத்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.
அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து, குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர் அஜிதா ராவ் கூறியதாவது,
கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பைதான் வழங்கவேண்டும், அவர்களை மனரீதியாவும், உடல் ரீதியாகவும் தாக்க கூடாது.இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது, அதன்படியே மாணவ சேர்க்கையும் நடைபெற்றது.
தமிழகத்தில் மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது அனைவரும் தெரியும். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தற்கொலைக்கு பிறகு தமிழகத்திலும் பயிற்சி மையங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு உள்ளது.
வரும் கல்வி ஆண்டில் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் இதுபோன்ற தனியார் பயிற்சி மையங்களை நாடி செல்கின்றனர். அவர்களை குறிவைத்தே தனியார் பயிற்சி மையங்கள் காளான்களாக பெருகி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புக்காக ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தனியார் பள்ளிகளின் துணையோடு பணத்தை பிடுங்கிக்கொண்டு பயிற்சி என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு மனஅழுத்தத்தையே கொடுத்து வருகிறார்கள்.
தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகள், இந்த பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து மேலும் அதிக பாரத்தை சுமக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதன் காரணமாக அவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உருவாகி வருகிறது. தற்போது இதுபோன்ற பயிற்சி மையங்களால் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக அளவில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற தனியார் பயிற்சி மையங்களை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
இல்லையெனில், தமிழக்ததிலும் அனிதா போன்ற மாணவ மாணவிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி விடும். தமிழக அரசும், பெற்றோரும் இப்போதே விழித்திருங்கள்…
படிக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு கண்காணித்து வாருங்கள்…
தமிழக மாணவ மாணவிகளையும் ஆந்திராபோல தற்கொலை முடிவுக்கு தள்ளிவிடாதீர்கள்.