திருப்பதி உள்ளிட்ட கோவில்களைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி

Must read

திருப்பதி

திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில கோவில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாடெங்கும் பல கோவில்கள் மூடப்பட்டன.   ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் மூடப்பட்டுள்ளன.  தற்போது இந்த கோவில்களில் பூஜை செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டு பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆந்திர மநில இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ” ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவில் உட்பட முக்கிய கோயில்களில் ஊரடங்கு காரணமாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசு இதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.

”தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பக்தர்களை அனுமதிக்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பக்தர்கள் சுரங்க கிருமிநாசினி பாதை வழியாக சமூக இடைவெளியுடன் அனுமதிக்க  வேண்டும்.

பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலமாக ஆன்லைனில் டிக்கெட் வழங்கி ஒரு மணி நேரத்திற்கு 250 பக்தர்களுக்கு அனுமதிக்கலாம்.
கோவில் அர்ச்சகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சடாரி, தீர்த்தம் வழங்குவது போன்றவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் வரிசைகள் அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் அரசாணைப்படி, விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் திறக்கப்பட உள்ளது.  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்  இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

More articles

Latest article