திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடுவதை ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். காணிக்கையாக தங்களுடைய நிலங்களை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்ளது. சில நிலங்கள் பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும், அவற்றை பலர் அபகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் சில நிலங்களை குறிப்பாக தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை ஏலமிட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 23 விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது பற்றிய தகவல் வெளியானதும் பக்தர்கள் மத்தியில் பெரும் கவலை சூழ்ந்தது. இந் நிலையில், திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடுவதை ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும் ஆந்திர அரசு வெளியிட்டு உள்ளது.
அதில், பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் காரணமாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. சொத்துகள் விற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட சொத்துகளில் ஏதேனும் கட்டிடங்கள் கட்ட முடியுமா? கோவில்கள் எழுப்ப முடியுமா? என்பதை ஆராயுங்கள். அதுவரை இது தொடர்பாக எந்த முடிவையும் எடுகக வேண்டாம், அப்படியே நிறுத்தி வையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மீண்டும் எப்போது தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.