‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார்.
அவரைத் தொடர்ந்து இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார் ஆண்டனி வர்கீஸ். இதனால் அவரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சத்யன் சூர்யனுக்கு பதிலாக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சத்யன் சூர்யனுக்குத் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கமலுடன் இன்றியமையாத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதை ஃபகத் பாசில் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தினார். அந்தக் கதாபாத்திரம் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அர்ஜுன் தாஸை அணுகியுள்ளது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் அர்ஜுன் தாஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இப்படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இரட்டையளர்களான அன்பறிவ் இப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர்களாக பணியாற்றி உள்ளது தான் அந்த அப்டேட்.
கேஜிஎப் 1 மற்றும் 2, கைதி, சண்டக்கோழி 2, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் பணியாற்றியுள்ளார்கள்.
Welcome onboard @anbariv Masters👊🏻@ikamalhaasan @RKFI #Vikram pic.twitter.com/hcbtu50GKR
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 12, 2021