சென்னை

வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ பற்றி நடிகர் ஆனந்தராஜ் பல சந்தேகங்கள் எழுப்பி உள்ளார்.

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு முதல் நாள் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோவை வெளியிட்டார்.  இது குறித்து பரபரப்பு கிளம்பியது.   அனைவரது மனத்திலும் அப்போது எழுந்த கேள்விகள் இரண்டு.  இந்த வீடியோ உண்மையா எனவும் தேர்தல் நேரத்தில் வீடியோ வெளியிடப்பட்டது ஏன் எனவும் கேள்விகள் பிறந்தன.

தற்போது ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் நடிகர் ஆனந்தராஜ் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது.  “ஒரு வீடியோ உண்மையா அல்லது மார்ஃபிங் செய்யப்பட்டதா என்பது சினிமாவில் உள்ள எங்களுக்கு நன்கு தெரியும்.  எந்த ஒரு வீடியோவிலும் அது எடுக்கப்பட்ட தேதி, நேரம் போன்றவை அதில் இருக்கும்.  ஆனால் அது போல விவரங்கள் இல்லாத வீடியோவை ஏன் வெளியிட்டார்கள்?  அப்போலோ மருத்துவமனையிலும் சிசிடிவி வீடியோ இருந்திருக்கும்.  ஆனால் அதை வெளியிடாமல் இதை வெளியிட்ட காரணம் என்ன?

ஜெயலலிதா உடலில் லேசாக துணி விலகி இருக்கும் போது சரி செய்யாமல் எதற்கு வீடியோ எடுக்கப்பட்டது?  இந்த வீடியோவைப் பார்த்தால் போயஸ் இல்லத்தில் எடுக்கப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது.  இந்த வீடியோவில் ஜன்னலில் தெரியும் இதே மரம் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ளது.  ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 அடி உயரத்தில் இருந்த 3 ஆவது மாடியில் இருந்ததாக சொல்லப் படுகிறது.  அவ்வளவு உயரம் வளரும் பார்ம் மரம் எங்கு உள்ளது?  இது போல சந்தேகங்களை நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் விசாரணை செய்து விவரங்களை வெளியிட வேண்டும்.

அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளும் தினகரன் பின்னே ஏன் கட்சியை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டும்?  தற்போது கட்சியின் தலைவர்களால் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.  மேலும் சிலர் நீக்கப் படலாம்.   தொண்டர்கள் மனம் திருந்தி கட்சியில் செயல் படவேண்டும்.  இது தான் உண்மையான அதிமுக என்பதால் இதையே தொண்டர்கள் பின்பற்ற வேண்டும்.  இந்தக் கட்சி சாமானியர்களுக்காக தொடங்கப்பட்டது.  ஒரு குடும்பத்துக்காக இல்லை என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.