பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் தங்கப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக ராணுவ விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சீனாவில் நடந்துவரும் உலகளவிலான ராணுவ விளையாட்டுப் போட்டிகளில், 140 நாடுகளைச் சேர்ந்த 9000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான 100மீ ஓட்டமும் ஒன்று.

இதில் கலந்துகொண்ட ஆனந்தன், சிறப்பாக செயல்பட்டு முதன்முறையாக தங்கம் வென்று கலக்கினார். இவர் தங்கம் வெல்வதும் இதுதான் முதல்முறை.

கடந்த 2008ம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற ஒரு கன்னிவெடி தாக்குதால் காலை இழந்த ஆனந்தன், துவண்டுவிடாமல், தென்னாப்பிரிக்க நாட்டின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் பிஸ்டோரியசைக் கண்டு ஊக்கமடைந்து, தானும் அப்படி ஆகவேண்டுமென தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார்.

இவர் ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால், தங்கம் வெல்வது இதுதான் முதன்முறை.