மும்பை
இந்தியாவில் முகநூல் போன்ற சமூக தளம் அமைக்க முன் வருவோருக்கு நிதி உதவி உட்பட பல்வகை உதவிகளும் செய்ய உள்ளதாக மகிந்திரா குழும தலைவர். ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு என இணைய தள தேடுதல் தளம் ஒன்று ’குருஜி’ என்னும் பெயரில் கடந்த 2000களில் இருந்தது. அதன் பிறகு கூகுள் இந்தியாவில் நுழைந்த பிறகு அந்த நிறுவனம் மறைந்து போனது. அதன் பிறகு வந்த ஆர்க்குட் தளம் வளர்ந்து அதுவும் முகநூலின் வருகைக்குப் பின்னர் சிறிது சிறிதாக தேய்ந்து தற்போது இயக்கத்தில் கிடையாது. இந்தியாவில் தற்போது முகநூலும் வாட்ஸ்அப் தளமும் முன்னணியில் உள்ளன.
சமீபத்தில் முகநூலில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப் பட்டதாக எழுந்த தகவல்களுக்குப் பின் முகநூல் உபயோகிப்பாளர்கள் மத்தியில் இது குறித்து அச்சம் நிலவி வருகிறது. முகநூலுக்கு மாற்றாக மற்றொரு தளம் அமைப்பது குறித்த யோசனை வளர்ந்து வருகிறது. இது போன்ற முயற்சிகள் முன்பு எடுக்கப்பட்ட போது பல்லாயிரம் கோடி முதலீடு செய்யப்பட்ட பெரு நிறுவனமான முகநூலுடன் மோத முடியாமல் அந்த முயற்சிகள் நின்று போயின.
மகிந்திரா குழுமம் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய தொழில் குழுமம் ஆகும். இந்தக் குழுவின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. மும்பையில் வசித்து வரும் 62 வயதான ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது டிவிட்டரில் இணைய தள அமைப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் தனதுஅறிவிப்பில் “நமது நாட்டின் சொந்த சமூக தளம் உருவாக்குவது குறித்து யோசிக்க வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம். அதை முழுமையாக ஆரம்பித்து தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் கொண்டு வந்து நடத்த இந்தியார்கள் யாரும் உள்ளனரா? இது குறித்து இந்திய இளைஞர்கள் குழுவிடம் திட்டங்கள் இருந்தால் என்னை அணுகலாம். நான் அவர்களுக்கு முதலீட்டுக்கான நிதி உதவி உட்பட பல உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறேன்” என பதிந்திருந்தார்.
இதற்கு இளைஞர்கள் மத்தியில் பல திட்டங்கள் தரப்பட்டன. அவற்றில் ஜஸ்பிரீத் பிந்திரா என்னும் இளைஞர் இது குறித்து அளித்த திட்டங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனந்த் மகிந்திரா அவருக்கு உதவி செய்வதாக கூறி உள்ளார்.
டிவிட்டரில் காலை வணக்கம், கருத்துக்கள் போன்றவை அதிகம் வெளியாகும் நேரத்தில் இது போல ஒரு டிவீட் மற்றும் அதற்கான பதில்கள் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
மகிந்திராவின் இந்த டிவிட்டுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.