சென்னை
முகநூல் மூலம் காதல் கொண்ட ஒரு இளம்பெண்ணுக்கு அவர் காதலரான முதியவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை மாநகரம் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகள் சுமித்ரா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுமித்ரா தனது வேலை நேரம் போக மற்ற நேரங்களில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளங்கோ தெருவை சேர்ந்த வேலு என்பவர் முகநூல் மூலம் சுமித்ராவுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
வேலுவுக்கு பலவருடங்களுக்கு முன்பே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வேலு இந்த விஷயத்தை மறைத்து சுமித்ராவிடம் பழகியுள்ளார். வேலு தனது முகநூல் கணக்கின் சுயவிவர குறிப்பில் வயது, புகைப்படத்தை மறைத்து, வேறு ஒரு இளைஞரின் புகைப்படத்தை பதிந்துள்ளார். நண்பர்களாக பழக ஆரம்பித்த வேலுவை சுமித்ரா நாளடைவில் முகம் பார்க்காமலேயே காதலிக்க தொடங்கினார்.
இவர்கள் காதல் வளர்ந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி நேரில் சந்திக்க வேண்டும் என்று சுமித்ராவை வேலு அழைத்துள்ளார். அவர் விருப்பப்படி நேரில் வந்த சுமித்ரா, தனது அப்பா வயதில் இருக்கும் வேலுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரத்தில் வேலு சுமித்ராவின் விருப்பம் இல்லாமல், வலுக்கட்டாயமாக அவரது கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகிறது.
வேலுவிடம் இருந்து தப்பியோடிய சுமித்ரா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர்கள் இதுபற்றி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியே வந்த வேலு, சுமித்ரா வீட்டிற்கு சென்று, ”மரியாதையாக என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன்” என சுமித்ராக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது பெற்றோர் மீண்டும் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மற்றொரு வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலுவை கைது செய்து மறுபடியும் சிறையில் அடைத்துள்ளனர்.