இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை இணை செயலாளராக பதவி வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரி அமன் மிட்டல் மற்றும் அவரது சகோதரர் திவேஷ் ஆகியோர் மீது மும்பை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி அமன் மிட்டல் வீட்டில் இன்டர்நெட் சேவை சரியில்லாததை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தைச் சேர்ந்த பூஷன் குஜ்ஜார் மற்றும் சாகர் மந்தர் ஆகிய இரண்டு பொறியாளர்கள் கடந்த சனிக்கிழமை அன்று அதனை சரிசெய்ய சென்றுள்ளனர்.
அப்போது வை-பை ரவுட்டர் பழுதானதாக பொறியாளர்கள் கூறியதை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் பொறியாளர்கள் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் பூஷன் குஜ்ஜாருக்கு கால் விரல் முறிந்ததாகவும் மற்றும் சாகர் மந்தருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை போலீசார் ஐஏஎஸ் அதிகாரி அமன் மிட்டல் மற்றும் அவரது சகோதரர் திவேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.