வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர அனுப்பப்பட்ட விமானங்களில், பயணம் செய்த ஒரு கேரள மாநிலத்தவர், அதுதொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தனது அனுபவங்களையும் குறித்து விளக்கியுள்ளார்.

தொழில் நிமித்தமாக சென்று, லண்டனில் சிக்கிக்கொண்ட சஞ்சய் மேனன் என்பவர், மே 19ம் தேதி கொச்சி திரும்பினார்.

அவர் கொடுத்துள்ள இந்த அனுபவ வாக்குமூலம், வெளிநாட்டில் சிக்கிக்கொண்டுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. எனவே, அந்த விளக்கத்தை உங்களின் பார்வைக்கும் அளிக்கிறது பத்திரிகை.காம் இணையதளம்.

அவரின் வார்த்தைகளிலிருந்து; கடந்த ஏப்ரலில், இந்திய ஹை கமிஷன், பதிவுசெய்து கொள்வதற்கான ஒரு இணைப்பை வெளியிட்டது. நான் அதில் பதிவுசெய்தேன். மேலும், கேரள அரசின் Norka இணையதளத்திலும் பதிவுசெய்தேன்.

இந்திய ஹை கமிஷனிலிருந்து, மேலும் சில பகுதிகளை நிரப்புமாறு எனக்கு மற்றொரு மின்னஞ்சல் வந்தது. நான், லண்டனில் எனது இக்கட்டான நிலையை இந்திய ஹை கமிஷனுக்கு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்நிலையில், இந்தியர்களைத் திரும்ப அழைத்துவரும் விமானங்களின் சேவை, மே 7ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்நேரத்தில், வெளிநாட்டில் சிக்கியுள்ள மலையாளிகளுக்காக வாட்ஸ்ஆப் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. நான் அதில் இணைந்தேன்.

இந்நிலையில், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, எங்களால் இயன்ற உதவிகளை செய்தோம்.

உண்மையில், கடைசியில் என்ன நடக்கும், நாம் நினைத்தபடி நாடு திரும்புவோமா? என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அது ஒரு அதிர்ஷ்டம் தொடர்புடையதாக இருந்தது. இந்திய ஹை கமிஷனிலிருந்து பலருக்கு நேரடி அழைப்புகள் அடிக்கடி வந்தன. ஆனால், எனக்கு அப்படி நேரடி அழைப்புகள் வரவில்லை.

எனக்கு, மே 17ம் தேதி, பர்மிங்ஹாமிலுள்ள ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து நேரடி அழைப்பு வந்தது. எனது பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் பயணக் கட்டணம் பற்றி கேட்க, நான், அப்பணியை நிறைவுசெய்ய, எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்கள், எனது கார்டு விபரங்களை நேரடியாக தருமாறு கேட்டனர்.

ஆனால், அந்த விபரங்களை நான் நேரடியாக தருவதற்கு முன்பாக, ஏர் இந்தியா எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில், அவர்களிடமிருந்து அழைப்பு வரலாம் என்று குறிப்பிட்டிருந்த எண்களின் பட்டியலில், என்னிடம் விபரம் கேட்ட எண்ணும் இருக்கிறதா? என்று சரிபார்த்தேன்.

அப்பட்டியலில், அந்த எண்ணும் இருந்தது. எனவே, தைரியமாக எனது கார்டு விபரங்களை பகிர்ந்தேன். நீங்கள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, மோசடியைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், எனது பாஸ்போர்ட் எண் மற்றும் எனது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை அவர்களிடம் உறுதிசெய்துகொண்ட பின்னரே, எனது கார்டு விபரங்களைப் பகிர்ந்தேன். இதில் எனக்கான ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்னவென்றால், நான் ஏர் இந்தியா அலுவலகத்துடன் அழைப்பில் இருக்கும்போதே, எனக்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. இந்த எளிதான செயல்பாடு, பலருக்கும் நேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஹை கமிஷனிலிருந்து எங்களுக்கு முதலில் சொல்லப்பட்ட டிக்கெட் கட்டணம் ரூ.50411. ஆனால், பின்னர் ஏர் இந்தியா தரப்பில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட கட்டணத் தொகையோ ரூ.55743. இதை நான் தொடர்புடையவர்களுக்குத் தெரிவித்த பின்னர், அந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை உறுதிசெய்து எனக்கு மின்னஞ்சல் வந்தது.

இந்தக் கட்டண உயர்வு பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. பல நபர்கள், ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து அழைப்பைப் பெற்று, கட்டணம் செலுத்தியப் பிறகும் அவர்களுக்கான டிக்கெட் கிடைக்கவில்லை. இப்படி யாருக்கேனும் நடந்தால், நேரடியாக விமான நிலையம் சென்றுவிடவும்.

பலர், ஏர் இந்தியா நிறுவனத்தை திரும்ப திரும்ப தொடர்புகொண்டும், அவர்களுக்கான டிக்கெட் கிடைக்கவில்லை. உண்மையில், இது வெட்கக்கேடான ஒன்று.

எனவே, டிக்கெட் உங்கள் கைகளில் கிடைக்காதவரை, உங்களின் விமானப் பயணம் உத்தரவாதமில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பல்வேறான பிளாக்குகள் மற்றும் போஸ்ட்டுகளைப் பார்த்து, எனக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொண்டேன். எனது பயணச் சீட்டின்படி, நான் 46 கிலோவுக்கு மிகாத 2 சுமைகளை மட்டுமே கொண்டுசெல்ல முடியும்.

உணவு குறைவாகவே இருக்கும் என்று தெரிந்திருந்த காரணத்தால், நான் இரண்டு சான்ட்விட்ச்களை வாங்கிக் கொண்டேன். இதன்மூலம், என்னிடம் கூடுதல் உணவு இருந்தது. என்னிடம் 5 ஜோடி ரப்பர் கையுறைகள், 5 முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான் போன்றவையும் இருந்தன.

கடைசி நேரத்தில் ஏதேனும் சிக்கல் எழுவதைத் தவிர்க்கும் பொருட்டு, எனது டிக்கெட் மற்றும் பாஸ் ஆகியவற்றை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டேன்.

மே 19ம் தேதி, மதியம் 1.15 மணிக்கு எனது விமானம் புறப்படுவதாக ஏற்பாடு. ஆனால், நான் மிகவும் முன்கூட்டியே விமான நிலையத்தில் இருப்பதற்கு திட்டமிட்டேன்; ஏனெனில் அங்கு நீண்ட வரிசை இருக்குமென்பதை அறிந்திருந்தேன். மேலும், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவ வேண்டுமென்றும் நினைத்தேன்.

விமான நிலையத்தை அடைந்ததும், அங்கிருக்கும் அதிகாரிகள் டிக்கெட்டை உறுதி செய்தார்கள். நீங்கள் பணம் செலுத்தியிருந்து, உங்களுக்கான டிக்கெட்டைப் பெறவில்லை என்றாலும், அந்த அதிகாரிகளிடமே புகார் தரலாம்.

விமான நிலையத்தில், வரிசையில் நின்ற தருணத்தில்தான், எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஒரு பயணி, கையில் லேப்-டாப் பை தவிர, கூடுதலாக ஒரு கைப்பையை எடுத்துவர அனுமதியில்லை எனவும், அப்படி கட்டாயம் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு கூடுதலாக ரூ.13094 செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டது. அதாவது, விமானத்தில் போதிய இடமில்லை என்பதே அதற்கு காரணம்!

அப்போதுதான் அது கமர்ஷியல் விமானம் அல்ல என்பதும், வெளிநாடுகளில் சிக்கியவர்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும் விமானம் என்பதும் புரிந்தது. லேப்-டாப் பை தவிர, கூடுதலாக ஒரு கைப்பையை வைத்திருந்த எனக்கு, அப்போது கூடுதல் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடிவுசெய்தேன்.

ஆனால், மற்ற பயணிகள் பலர் இதன்பொருட்டு, ஏர் இந்தியா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, எனது முடிவு மாறியது.

இந்நிலையில், என்னுடன் பயணம் செய்ய வந்த வயநாட்டைச் சேர்ந்த இன்னொரு பயணி, ஒரேயொரு பையை மட்டுமே வைத்திருந்ததால், அவர் எனது ஒரு கைப்பையை ஏற்றுக்கொண்டு, எனக்காக செக்-இன் செய்ய ஒப்புக்கொண்டார். எனது பையில் உள்ள பொருட்களைக் காட்டி, எனது பிசினஸ் கார்டையும் அவரிடம் காட்டினேன்.

இதன்பிறகு பயண சுமை விஷயத்தில் கடைசியாக அனைத்தும் உறுதி செய்யப்பட்டது.

* மொத்தமாக 46 கிலோ எடையுள்ள செக்-இன் லக்கேஜ்: தலா 23 கிலோ எடையுள்ள 23 பைகள்

* கையில் வைத்திருக்கும் லக்கேஜ்: ஒரேயொரு பை மட்டுமே அனுமதி. கூடுதல் பை எடுத்துச் செல்ல வேண்டுமெனில், தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்பிறகு, தீவிரமான பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்ட பிறகு, நாங்கள் கதவை நோக்கி நடந்தோம். வயதானவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம் வரை வருவதற்கான வண்டி(buggy) சேவைகளும் உண்டு.

நீண்டதூரம் நடந்து கதவை அடைந்தபிறகு, அங்கே தெர்மல் பரிசோதனைக்காக, பாம்பு மாதிரி, சமூக இடைவெளியைப் பின்பற்றாத வரிசைகள் இருந்தன. வரிசையில் நின்றிருந்த பலருக்கும் தாகம். அங்குள்ள நீரூற்றில் நீரை நிரப்பிக் கொள்ளலாம் அல்லது ரூ.187 கொடுத்து வெண்டிங் மெஷினில் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அந்த மெஷினில் குளிர்ந்த நீர் மட்டும்தான் கிடைத்தது என்பது ஒரு கொடுமை.

எனவே, இந்த சூழல்களில் தண்ணீர் பாட்டில் அல்லது காலி பாட்டில்களை எடுத்து வருவது மிகவும் உசிதமானது. பயணத்திற்கு முந்தைய பல்வேறு நடைமுறைகளுக்கு தாமதமானதால், விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், பிற்பகல் 3.30 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றது.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், எங்களுக்கு 2 தின்பண்ட பொட்டலங்கள் அடங்கிய ஒரு நீலநிறப் பை வழங்கப்பட்டது. அதில், 2 தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. தேவைப்பட்டால் தண்ணீர் மீண்டும் கேட்கலாம் என்றும், ஆனால் உணவு மறுபடியும் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டது.

(இந்த சூழலில், தேவைப்படுவோர், தங்களுக்கு ஏற்ற கூடுதல் உணவை எடுத்துச் செல்வது மிகவும் உசிதமானது)

விமானத்தில், முகமூடி மற்றும் முகக் கவசத்தையும் அளித்தனர். அது ஹெல்மட்டை ஒத்திருந்தது. ஆனால், அது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், ஏர் இந்தியாவில் கையுறை தரப்படவில்லை. எனவே, நாமே அதைக் கொண்டு செல்வது நல்லது. அதேசமயம், மொத்தம் 10 ‍ஜோடிகள் வரை கொண்டு செல்வது நல்லது. அப்போதுதான் பயணத்தின்போது தேவையான நேரத்தில் மாற்றிக்கொள்ள முடியும்.

அதன்பிறகான பயணம் செளகரியமாக இருந்தது. பொழுதுபோக்கு அமைப்பு வேலை செய்யாத காரணத்தால், நமது சொந்த மொபைல் உள்ளிட்டவைகளே பயன்பட்டன. நாங்கள் விடியற்காலை 4.20 மணிக்கு மும்பையை அடைந்தோம். இடையில் வேறு கூடுதல் தின்பண்டம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

அதன்பிறகு, மே 20ம் தேதி, காலை 7.15 மணிக்கு கொச்சியில் தரையிறங்கினோம். அதாவது, 30 நிமிடங்கள் தாமதமாக வந்திறங்கினோம். விமானத்தில் கூட்டம் சரியாக இருந்தது. நடு இருக்கைகள் காலியாக இருக்கவில்லை. ஆனால், எனது அருகில் இருந்த நடு இருக்கை, அந்த நபர் தனது நண்பருடன் வேறு இருக்கையில் அமர்ந்து கொண்டதால் காலியாக இருந்தது எனது அதிர்ஷ்டம்.

கொச்சின் விமான நிலையத்தில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ஒரு நேரத்தில் 30 பயணிகள் மட்டுமே வெளியே விடப்பட்டனர். எங்களுக்கு லண்டனில் வழங்கப்பட்டப் படிவத்தை இங்கே பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது.

படிவத்தைப் பூர்த்திசெய்து வழங்கியவுடன், எங்களுக்கு தெர்மல்(வெப்பநிலை) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வெப்பநிலை இயல்பான அளவில் இருந்தால், இமிகிரேஷன் பகுதிக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, வழக்கமான கை சாமான்கள்(hand baggage) ஸ்கேனிங் மேற்கொள்ளப்பட்டு, baggage பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

உங்களின் சொந்தப் பேனாவை உடன் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், படிவங்களைப் பூர்த்திசெய்யும்போது பேனா பரிமாற்றத்தை தவிர்க்கலாம்.

எங்களின் சுமைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, ஹெல்த் சர்வீஸ் டெஸ்க்கிற்கு சென்றோம். அது கஸ்டம் நடைமுறைக்கு அடுத்தப் படி. அங்கு எங்களின் இருப்பிடம் கேட்கப்பட்டு, ஒரு படிவத்தை நிரப்புமாறு கேட்கப்பட்டோம்.

மே மாதம் 20ம் தேதி, விமான நிலையத்திற்கு வெளியே கேரள அரசின் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நின்றிருந்தன. இவற்றில், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் (75 வயதிற்கு மேல்), குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் தவிர மற்றவர்கள் ஏற வேண்டும். பிறர், தங்களுக்கு எந்தத் தொற்றுக்கும் வாய்ப்பில்லை என்று மிகவும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் நிரூபித்தால் ஒழிய வீட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை.

அங்கு, கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் பேருந்துகள் தயாராக இருந்தன. பேருந்தில் ஒரு உணவுப் பொட்டலம் கொடுத்தார்கள். அதில், பிஸ்கட்டுகள், பழ பன் மற்றும் இனிப்பு பன், ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்தன.

நான் கொச்சின் செல்ல வேண்டிய நபர் என்பதால், நான் கலமாசேரியிலுள்ள சேவியர் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் கல்வி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு, ஒரு சுகாதார அதிகாரியிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டியிருந்தது. அது அரசு சார்பிலான தனிமைப்படுத்தலாக இருந்தால், உங்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்படும்.

ஆனால், நான் தொழில்முனைவோராக இருந்த காரணத்தால், நான் கட்டணம் செலுத்தும் தனி அறையை எடுத்துக்கொண்டேன். அங்கு எனக்கு WiFi, மேசை வசதிகள் போன்றவை தேவைப்பட்டன. ஏனெனில், அடுத்த 14 நாட்களுக்கு நான் வேலைசெய்ய வேண்டியிருந்தது.

கட்டண அறைகளை விரும்புவோருக்கென்று சிறப்பம்சங்கள் கொண்ட தனி வாகனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் அதற்காக காத்திருக்க வ‍ேண்டியதானது. ஆனால், இப்படியான வசதிகளை தேர்வுசெய்துகொள்ளும் வாய்ப்புகள் விமான நிலையங்களிலேயே இருந்திருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்.

ஆனால், வாட்ஸ்ஆப் குழுவின் மூலம், கொச்சியில் எனக்குத் தெரிந்து 4 நட்சத்திர ஹோட்டலை தொடர்புகொண்டு, அதன்மூலம் எனக்கான வாகன வசதியைப் பெற்றேன். நான் ஒருநாள் அறை வாடகையாக ரூ.2600 செலுத்தினேன். எனக்கு 3 வேளை உணவுடன், தேநீர் மற்றும் காஃபி போன்றவையும் வழங்கப்பட்டன.

PCR சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கொச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தெர்மல் பரிசோதனை மட்டும்தான்.

எனக்கு கொச்சிதான் வீடு என்பதால் பிரச்சினையில்லை. ஆனால், வயதான பலர் காசர்கோடு மற்றும் கண்ணூர் வரை அரசுப் பேருந்தில் செல்ல வேண்டியிருந்திருக்கும். அவர்கள் எப்படி சமாளித்திருப்பார்கள்? எனவே, நாம் முன்னேற்பாடுகளுடன் இருப்பது நல்லது.

நான் கொச்சியில் இறங்கியப் பிறகு, எனக்கு கமிஷனர் அலுவலகத்திலிருந்து 3 அழைப்புகளும், சுகாதார அதிகாரிகளிடமிருந்து 2 அழைப்புகளும் வந்தன. அவர்கள் என்னைப் பற்றிய விபரங்களையும், நான் எங்கு தங்கியுள்ளேன் என்பதையும் கேட்டுக்கொண்டனர்.

நான் ஹோட்டலில் இருந்த மூன்றாம் மற்றும் நான்காம் நாளில், சில சுகாதார அதிகாரிகள் அங்கு வருகை புரிந்தனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு வருகையாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தனர். நல்லவேளையாக, எனது பரிசோதனை முடிவு நெகடிவ் என்று வந்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள பல இந்தியர்கள், இன்னும் பயணம் செய்வதைப் பற்றி பதற்றமாகவே உள்ளனர். பிரிட்டனில் இன்னும் பல இந்தியர்கள் உள்ளனர். எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், அவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பயணம் செய்வது பாதுகாப்பானது மற்றும் அரசு & விமான நிறுவனங்கள் ‍தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வ‍ேண்டும் என்பதை இறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்…

நன்றி: த நியூஸ் மினிட்