மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அம்ருதா ஃபட்னாவிஸுக்கும், பிரபல கிரிக்கெட் புக்கியான அனில் ஜெய்சிங்கனிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய குற்றப் பதிவுகளை வைத்திருப்பதாக, தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான எம்.வி.ஏ. கூட்டணியை வீழ்த்தி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அனில் பராப்பை சிக்க வைக்கவும்” என்ற அம்ருதா ஃபட்னாவிஸின் பதிவு தன்னிடம் இருப்பதாக அனில் ஜெய்சிங்கனி உறுதிப்படுத்துகிறார்.

MVA என்பது எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணியைக் குறிக்கிறது. இந்த தகவல்கள் தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

2021 நவம்பரில் அனில் ஜெய்சிங்கனி மகளான சட்ட மாணவி அனிஷ்கா தனது ஆடைகள், பாதணிகள் மற்றும் பைகள் வடிவமைப்பு பணி குறித்து அம்ருதா ஃபட்னாவிஸைச் சந்தித்தது விவாதித்திருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, ​​தாய் இல்லாததால் தனது குடும்பத்தை தான் ஆதரித்து வருவதாகக் கூறிய அனிஷ்கா ஜெய்சிங்கனி, தனது தந்தையை பல வழக்குகளில் இருந்து விடுவிக்க அம்ருதா ஃபட்னாவிஸுக்கு ரூ. 1 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததாகவும் அது நிராகரிக்கப்பட்டதை அடுத்து தனது தந்தையை விடுவிக்காவிட்டால் அம்ருதா ஃபட்னாவிஸ் சம்பந்தப்பட்ட குரல் பதிவுகள் மற்றும் வீடியோ கிளிப்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதுடன் அதை வெளியிடாமல் இருக்க 10 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மார்ச் 16 அன்று அனில் ஜெய்சிங்கனி மற்றும் அனிஷ்கா ஜெய்சிங்கனி இருவரையும் மும்பை போலீசார் கைது செய்தனர், அனிஷ்கா ஜெய்சிங்கனி மார்ச் 27 அன்று ஜாமீன் பெற்றார். கடந்த மாதம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அனில் ஜெய்சிங்கனி, அவரது மகள் அனிஷ்கா மற்றும் அம்ருதா ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளன.

அனில் ஜெய்சிங்கனி அம்ருதா ஃபட்னாவிஸுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், “கடந்த சிவராத்திரியில் எம்.வி.ஏ அரசாங்கத்தை வீழ்த்தவும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அனில் பராப்பை எப்படி சிக்க வைப்பது என்றும் சொன்னீர்கள். என்னிடம் எல்லா பதிவுகளும் ஆதாரங்களும் உள்ளன; கவலைப்பட வேண்டாம் சிவராத்திரி வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்ட செய்தியும்.

அம்ருதா ஃபட்னாவிஸ் டாலர்களில் பணத்தைப் பெறுவது போன்ற வீடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக ஜெய்சிங்கனி கூறுகிறார், அதை அவர் மற்றொரு சாட்டில் குறிப்பிடுகிறார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும், காவல்துறை ஆணையர்களான ஹேமந்த் நாக்ரலே மற்றும் சஞ்சய் பாண்டே ஆகியோரின் கீழும் நடந்த மறு விசாரணைகளை குறிப்பிட்ட ஜெய்சிங்கனி “எல்லாவற்றுக்கும் மேலாக நீதியை நாடியதாக” வேறொரு உரையாடலில் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்சிங்கனி மற்றும் அம்ருதா ஃபட்னாவிஸ் ஆகியோருடனான இந்த உரையாடல்கள் அவர் தொடர்ந்த மிரட்டல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மகாராஷ்டிரா மாநில அரசியலில் மீண்டும் புயலை ஏற்படுத்தியுள்ளது.