ஸ்ரீநகர்:
பெல்லட் ரக துப்பாக்கிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பெல்லட் ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதித்தவர்கள் குறித்த அறிக்கையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என் மனித உரிமை ஆர்வல அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில்,‘‘ பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவம் நடந்தபோது வீட்டின் உள்ளே இருந்தனர்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டினால் பாதித்த 88 பேரில் 14 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் சம்பவம் நடந்தபோது வீட்டின் உள்ளே இருந்துள்ளனர் என்று அந்த அமைப்பின் ஆராய்ச்சியாளர் சாகூர் மிர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘மதிய நேரத்தில் டீ தயாரித்துக் கொண்டிருந்த ஒரு பெண் இந்த பெல்லட் ரக துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
இதில் பாதித்த ஷப்ரூசா மிர் என்ற இளம்பெண் கூறுகையில், ‘‘சம்பவம் நடந்த போது அந்த பகுதியில் வன்முறை எதுவும் நடக்கவில்லை. நாங்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தோம். திடீரென நுழைந்த பாதுகாப்பு படையினர் கிராமங்களில் ஓட்டியிருந்த போஸ்டர்களை அகற்றினர். நான் மெட்ரிக் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன்.
பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் பாதிக்கப்பட்டேன். என்னை யார் மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை. என்னால் இப்போது படிக்க முடியவில்லை. நான் படித்தாக வேண்டும். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. என்னால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்றார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் செயல் இயக்குனர் ஆக்கர் படேல் கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது பயன்படுத்துவது கிடையாது. இதனால் ஏற்படும் காயங்களை அரசு ஏற்றுக் கொள்கிறது. இதற்கு பதிலாக கண்ணீர் புகை குண்டு அல்லது தண்ணீர் பீரங்கிளை பயன்படுத்த வேண்டும். இதனால் கல் வீச்சு சம்பவங்களும் குறையும்’’ என்றார்.
பாதிக்கப்பட்ட 88 பேரில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே அரசு படைக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கிலும் போலீசார் எவ்வித தகவல்களையும் அளிக்க மறுக்கின்றனர். இதில் 2 குழந்தைகளும் பாதித்துள்ளனர். குழந்தைகள் மீது பெல்லட் ரக துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர்.
அம்னெஸ்டி அமைப்பின் மூத்த ஆலோசகர் சைலேஷ் ரவி கூறுகையில், ‘‘சட்டம் ஒழுங்கை அமல்படுத்த வேண்டியது அரசு துறைகளின் கடமை தான். அதற்கு பெல்லட் துப்பாக்கிகள் தீர்வு கிடையாது. அதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த ரக துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.