அம்மாச்சி

கவிதை: கவிஞர் ராஜ்குமார் மாதவன்

அம்மாவின் அம்மா
அம்மாச்சி
என் தாய்க்கு தாய்மையை
கற்றுக்கொடுத்த தாயே !
நான் பிறந்தது உன் மகளுக்கு
நான் தவழ்ந்தது உன் மடியில்
உன் சேலை
தொட்டிலை
எத்தனை முறை
நனைத்திருப்பேன்

பிரசவித்த களைப்பில்
என் தாய் இருந்தபோதெல்லாம்
தாயாய் இருந்து காத்தவள்.
அன்பு மொழி கற்றுத்தந்தாய்,
அன்பாய் சோறூட்டி
மீதமதை அமிர்தமென
நீ உண்டாய்
கறியுண்ண பழக
நீ மென்று தந்தாய்
நான் கறிதின்றதே
உன் எச்சிலுக்காக

நான் உடைத்ததை
உன்னால் எண்ணலாகாது
உன் தாவாடை உட்பட
உன் கண்ணாடியை
எத்தனை தடவை
மாற்றியிருப்பாய்
ஒரு போதும் கோபித்ததில்லை.

என் வீட்டில்
சண்டை இட்டால்
அடுத்த நொடி
உன் வீடு.

பள்ளி சேர்க்க
வந்துபோனாய்
தேர்வு என்றால்
கோவில் சென்றாய்
தேறாதவளையும்
தேரச்செய்தாய்

நான் வாங்கிய
மார்க்கை கொலம்பஸ்
சாதனையாக
ஊர் பேசி வந்தாய்

ஒழுங்காக பாவாடை
கட்ட தெரியவில்லை என்று
தாய் சொன்னபோது
தாவணி கட்ட சொல்லித்தந்தாய்.

கடல் தாண்டி படிப்பதா
என்றதும்
விமானம் ஏறி பாடம்
படி என்றாய்

உன்னிடம் நான் எதை
மறைத்தேன், ரகசியம் உட்பட
நீ சொன்ன கதையில்
நானே தேவதை
அன்றும்
இன்றும்

அடுத்து பிறவி இருந்தால்
என் தாயோடு நானும்
சேயாய் பிறப்போம்
அம்மாச்சி மடியில்
மகளாக.