பெங்களூரு:
கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கர்நாடக அரசு தொடங்கியுள்ள மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’ஐ திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அந்த உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டார்.
தமிழகத்தில் ஏழை மக்கள் வயிறார பசியாறும் வகையில் அம்மா உணவகத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதை முன்மாதிரியாக கொண்டு பெங்களூருவில், இந்திரா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று இந்திரா கேன்டீன் திறந்து வைக்கப்பட்டது. இந்த மலிவு விலை உணவகத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
அதையடுத்து, அவர் பேசும்போது, இந்த அம்மா உணவகம் திட்டம் காங்கிரசின் திட்டம் என்று கூறினார். மேலும், இத்திட்டம் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் செயல் வடிவம் பெற்றுள்ளது என்றும், தற்போது கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை கேன்டீன்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
இந்த கேட்டீனில், காலை உணவு ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மதியம் மற்றும் இரவு உணவுகள் ரூ.10 க்கு கிடைக்கும் என்றும், முதல் கட்டமாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இந்த உணவகத்தை திறப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு வெளியிடப் பட்டது. 198 இடங்களில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக இன்று 101 இடங்களில் இந்திரா உணவகம் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.