
மதுரை:
தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பபட்டுள்ளது.
வரும் 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரு சக்கரம் வாங்க மானியம் வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்படி, பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது ரூ.25,000 மானியம் இதில் எது குறைவோ, அத்தொகையை அரசு வழங்க உள்ளது.
இந்த ஸ்கூட்டர் மானியம் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்கை பெற்றுள்ளது. இத்திட்டத்தின்படி ஸ்கூட்டர் மானியம் பெறுவதற்காக சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர், அரசு பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசங்கள் வழங்கி வருவதால், அரசின் நிதிநிலை மோசமடைந்துள்ளது என்றும், எனவே, இரு சக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மானிய ஸ்கூட்டர் திட்டம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]