மதுரை: அம்மா உணவகத்தில் இருந்து ஜெ. படம் அகற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கலைஞர் உணவகம் பெயரில் சமுதாய உணவகம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அம்மா உணவகம், கலைஞர் உணவகம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகளும் குறைக்கப்பட்டன. அம்மா உணவகங்களில் உள்ள ஜெயலலிதா படங்களும் அகற்றப்பட்டன. இது சர்ச்சையான நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் பல அம்மா உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டது. அதுபோல பல இடங்களில் கலைஞர் படமும் வைக்கப்பட்டது. ஏற்கனவே மதுரை உள்பட பல அம்மா உணவகங்களில், கலைஞர் படம் வைக்கப்பட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, கடந்த நவம்பர் மாதமே கண்டனம் தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அருகே கலைஞரின் படம் வைத்து திட்டத்தை திசை திருப்ப ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெ.படம் அகற்றப்பட்டதை கண்டித்து, அந்த உணவகத்தின் உள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.