டில்லி

காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்

காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நேற்று முன் தினம் காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் புகுந்த மர்ம நபர், இந்து மதத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அடுத்து, மத்திய காஷ்மீர் பகுதியில் செங்கல்சூளையில் இருந்து திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் இருவரைத் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் பண்டிட்கள் நூற்றுக்கணக்கானோர், ஸ்ரீநகர் உட்படப் பல இடங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அவர்கள்  தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பல பண்டிட்கள், பாதுகாப்புக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பலர் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

நேற்று டில்லியில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பண்டே, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதப்படை தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில்  காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.