ஐஸால்: மிசோரம் மாநிலத்திற்கு சென்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏபி ஆகியவைக் குறித்துப் பேசுவதை தவிர்த்தார்.

மத்திய அரசின் மேற்கண்ட முடிவுகளுக்கு மிசோரம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது. என்ஆர்சி மற்றும் சிஏபி ஆகியவற்றுக்கு எதிராக அம்மாநிலத்தில் செயல்படும் பல தன்னார்வ அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்கள் ஆகியவை உள்துறை அமைச்சரின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருந்தன.

என்ஆர்சி போன்ற அம்சங்களால் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரிய ஆபத்து என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். ஆனால், கடைசி நேரத்தில் தங்களின் எதிர்ப்புப் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இதற்கிடையில் மிசோரம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், சர்ச்சைக்குரிய அம்சங்களைப் பேசுவதை தவிர்த்துவிட்டு, வழக்கமான பல்லவியான வளர்ச்சி என்பதைப் பற்றி மட்டும் பேசினார்.

மிசோரமின் வைராபிக்கு ரயில் பாதை அமைத்தது மற்றும் துய்ரியல் நீர் மின்சக்தி திட்டம் உள்ளிட்டவைகளைப் பேசிய அவர், மோடியின் ஆட்சியில் 14வது நிதிக் கமிஷன் காலத்தில் ரூ.42,972 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.