மிழக பாஜக கலகலத்துப்போயிருக்கிறது. காரணம், வரும் 10ம் தேதி தமிழகம் வர இருந்த அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்பதுதான்.

அமித் வருகை ரத்து செய்யப்பட்டதை தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அறிவித்தார்.

அமித் வருகை ஏன் ரத்து செய்யப்பட்டது என்பதை அறிந்துகொள்ளுமுன், அவர் ஏன் தமிழகம் வர திட்டமிட்டார் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இது குறித்து தமிழக பாஜக இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் தெரிவித்ததாவது:

“‘உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார் அமித். இதற்காக 95 நாள் சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டது.

பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் அடுத்தகட்ட செயல்பாடுகளைத் திட்டமிடுவது, பாஜக வளர வேண்டிய மாநிலங்களில் அதற்கான செயல்திட்டங்களை வகுப்பதும் அவரது எண்ணம்.

இந்த பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 10ம் தேதி, தமிழகம் வர இருந்தார்.

தமிழகம் மீது அமித்துக்கு கூடுதல் ஈர்ப்பு உண்டு. திராவிடக் கட்சிகளே கோலோச்சும் இந்த மாநிலத்தில் பா.ஜ.க.வை தழைக்கச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆகவே பக்காவாக பயணத்திட்டம் தீட்டப்பட்டது.

கொங்கு மண்டலம் மற்றும் நாஞ்சில் பகுதிக்கு இப்பயணத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த பாராளுமன்றத் மற்றும்  சட்டமன்றத் தேர்தல்களில் இப்பகுதியில்தான் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

ஆகவே இந்த பகுதிகளையே ஆரம்பப்புள்ளியாக வைத்து தமிழகத்தில் பாஜக, கிளை பரப்பிவிட வேண்டும் என்பது அமித்தின் திட்டம்.

இதற்கேற்ப கோவை பகுதியில் அடிமட்ட தொழிலாளிகளில் இருந்து பெரும் தொழிலதிபர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் சந்திக்க எண்ணியிருந்தார் அமித். தவிர பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திலும் பேசவும் திட்டமிட்டிருந்தார்.

மேலும், கட்சி முக்கியஸ்தர்களுடன் தனிப்பட்ட கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தார். இவை குறித்தெல்லாம் தமிழக பாஜக நிர்வாகிககளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்” என்றார் அந்த பாஜக நிர்வாகி.

“அமித்தின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்” என்ற கேள்விக்கு விடை அளித்தார் இன்னொரு தென்மாவட்ட பாஜக பிரமுகர். இவர் டில்லி தலைவர்களுக்கு நெருக்கமானவர்.

அவர், “தனது தமிழக பயணத்திட்டத்தை வகுத்தவுடன், மாநில நிர்வாகிகளை தொடர்புகொண்ட அமித், கண்டிப்புடன் ஒரு விசயத்தைக் கூறினார்.

தனது தமிழக வருகை, இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்பட வேணுடம். முன்னதாக தகவல் கசிந்தால், சில முன்னேற்பாடுகளைச் செய்வதில் தேவையில்லாத தாமதம் ஏற்படும் என்றார்.

இதையடுத்து, அவருடைய பயணத் திட்டம் ரகிசியமாகவே வைக்கப்பட்டது. ஆனால், தமிழக தலைவர் தமிழிசையை பிடிக்காத கோஷ்டியினர், கடந்த நான்காம் தேதியே மீடியாக்களுக்கு இத் தகவலை பாஸ் செய்துவிட்டனர். இதனால் அமித்தின் பயணத்திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகிவிட்டன.

அதுமட்டுமல்ல…  “தமிழக தலைவர் தமிழிசையை, அகில இந்திய தலைமை பொருட்படுத்துவதே இல்லை. அமித்தின் வருகை கூட, தமிழிசைக்குத் தெரியாது. விரைவில் இவரை மாற்ற அகில இந்திய தலைமை முடிவெடுத்துவிட்டது” என்றும் ஒரு தகவலை பரப்பினர்.

இதை அறிந்த தமிழிசை கொதித்துப்போய்விட்டார். இத் தகவல்களை ஆதங்கத்துடன்அகில இந்திய தலைமைக்கு தெரிவித்தார்.

இதையடுத்து தமிழிசைக்கு எதிரான கோஷ்டியினரை.. அதாவது சில நிர்வாகிகளை தொடர்புகொண்டது அகில இந்திய தலைமை. “தமிழிசையை மாநிலத் தலைவராக தேர்வு செய்தது அகில இந்திய தலைவர். அவரை எதிர்த்து செயல்படுவது கட்சி நலனை பாதிக்கும். அவரை எதிர்ப்பதாக நினைத்து அகில இந்திய தலைவரின் பயணத்திட்டத்தையும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். இதுவும் கட்சிக்கு எதிரான செயல்” என்று கடுமையாக சொல்லப்பட்டது.

அதோடு, தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது பயணத்தையும் ரத்து செய்தார் அமித்” என்றார் அந்த தென்மாவட்ட பிரமுகர்.

ஆக, தமிழக பா.ஜ.கவில் உச்ச கட்ட  கோஷ்டி மோதல் நடந்துகொண்டிருக்கிறது. இதை அறிந்த அமித், மன வருத்தத்தில் தனது பயணத்தையே ரத்து செய்திருக்கிறார் என்பதே தற்போதைய நிலவரம்.