டில்லி:

த்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இன்று பிற்பகல் முதன்முறையாக காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா. அவருடன்  உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவும் செல்கிறார். இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  இன்று பிற்பகல் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார். அங்கு பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அமித்ஷா, அங்கு நிலவும் பரபரப்பான சூழல், தீவிரவாத அச்சுறுத்தல், வேலை வாய்ப்பு, இளைஞர்களின் நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவரது பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் அமித்ஷா, அங்கு சமீபத்திய இராணுவ மற்றும் இராணுவ சார்பற்ற ஆதாயங்களை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிப்பார் என்றும்,  கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த ராணுவ உயரதிகாரி ஒருவர், மாநிலத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு முறைகள் மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து அமித்ஷா ராணுவ அதிகாரிகளுடன் விவாதிக்க இருப்பதாகவும், மேலும் சிஆர்பிஎம், பிஎஸ்எப் அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாகவும் கூறினார். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான சூழல் உருவாக தேவையான நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஆலோசனைகளின்போது, இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்வதற்கான சர்ச்சைக்குரிய விஷயம் குறித்தும் ஏதும் பேச  வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.