முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அரசியல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித் ஷா சென்னை வரும் நிலையில் அவருக்கு கருப்புக்கொடி காட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இன்று மாலை 4 மணிக்கு திரள உள்ள காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள வெங்கய்யா நாயுடு பேரன் திருமண நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து இன்று மாலை சுமார் 6 மணிக்கு புறப்படும் அமித் ஷா இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

இதனால் விமான நிலையம் முதல் ஈ.சி.ஆர். சாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் வருகை தருகிறார்.

இதையடுத்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்​குட்​பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ் பவன், விவிஐபி பயணிக்கும் வழித்​தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்​கப்​பட்டு, அப்பகு​தி​களில் ட்ரோன்​கள், ரிமோட் மூலம் இயக்​கப்​படும் மைக்​ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்​டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் ​போன்றவைபறக்க விட தடை ​விதிக்கப்​பட்டுள்ளது.

குடியரசு துணை தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையை (ஈசிஆர்) பொதுமக்கள் பயன்படுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.

எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங்கள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓஎம்ஆர்) மாற்றுப்பாதையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.