கவராட்டி: லட்சத்தீவில் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம் தொடர்பான புதிய வரைவு சட்டங்கள் குறித்து அங்கு வசிக்கும் மக்களின் கருத்து கேட்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகியாக முன்னாள் மத்தியஅமைச்சர் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களை அமல்படுத்த உள்ளார். அதன்படி, லட்சத்தீவில் நிலம் கையகப்படுத்துவது, சமூக விரோதிகளை ஓராண்டு வரை சட்டப் பாதுகாப்பின்றி சிறை வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இதற்கு அங்கு வசிக்கும் மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கேரள சட்டமன்றத்திலும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த வரைவு சட்டங்கள் தொடர்பாகலட்சத்தீவு எம்.பி.யும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான முகமது பைசல் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய சீர்திருத்தங்களை திரும்பப்பெறுமாறு அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முகமது பைசல், லட்சத்தீவில் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனையில் உள்ள வரைவுச் சட்டங்கள் குறித்து லட்சத்தீவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதன் பின்பே சட்ட அமலாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என தன்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.