டில்லி

ரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆறு பேர் ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கத்துக்குப் பின் நடந்த கடும் நிதி நிலை சரிவு,  வங்கி ஊழல்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திசைகளில் இருந்து அரசுக்கு அடிக்கு மேல் அடி கிடைத்து வருகிறது.

இதை ஒட்டி அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாள் ஆலோசனக் கூட்டம் ஒன்று நேற்றும் இன்றும் டில்லியில் நடைபெறுகிறது.   ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை செயலர் கிருஷ்ண கோபால் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.  இதில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பல்வேறு துறைத் தலைவர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

அது தவிர பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷா, துணைத்தலைவர் விஜய் சகஸ்ரபுத்தே, பொதுச் செயலர் ராம் மாதவ், செயலர் ராம்லால் மற்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள ராஜ்யவர்தன் ராதோட், ஜே பி நத்தா, மேனகா காந்தி, மகேஷ் ஷர்மா, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தாவர்சந்த் கெகலாத் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. அரசின் திட்டங்கள் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.  இன்று ஏர் இந்தியா பங்குகள் விற்பனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.