டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் பிறழ்வான ஒமிக்ரானின் உருமாறிய வைரஸ் வகையான B.F.7 கொரோனா தொற்று சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சதவிகிதத்தினர் BF.7 வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இந்த கொரோனா வெகுவேகமாக பரவி உச்சத்தை எட்டியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாகவும், உயிரிழந்தோர் சடலங்கள் பொட்டலங்களாக கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையடுத்து இந்தியாவிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் விமான நிலையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர்.பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.