துபாய்

துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர்.

துபாய் சீக்கியர் கோவில்

உலக அளவில் கொரோனா பதிப்பு மீண்டும் துபாயில் அதிகரித்து வருகிறது.  இங்கு இதுவரை 3.32 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு 947 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  தினசரி பாதிப்பு தற்போது சுமார் 3000க்கும் மேல் உள்ளது.  எனவே இங்குக் கட்டுப்பாடுகள் கடுமையாகப்பட்டுள்ளன.  இந்நாட்டில் உள்ளூர் மக்களை விட ஆசியா, ஆப்பிரிக்க உள்ளிட்ட அனைத்துப் பகுதியில் இருந்தும் வந்து பணி புரிவோர் அதிக அளவில் உள்ளனர்.

இங்கு இதையொட்டி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.   அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் மக்களின் தேவைக்கு அது போதுமானதாக இல்லை.  பல மேற்கத்திய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்க பல முன்னுரிமைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் துபாயில் அனைவருக்கும் வரிசைப்படி போடப்படுகின்றன, எனவே மக்களிடையே ஊசிகள் போட்டுக் கொள்ள கடும் போட்டிகள் நிலவுகின்றன.

தற்போது பிஃபிசர் மற்றும் பயோண்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு தொடங்கி உள்ளதாலும் கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளதாலும், கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வோருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   இதனால் மக்களிடையே இந்த கொரோனா ஊசிக்கான போட்டி மேலும் அதிகரித்துள்ளது.

துபாயில் சீக்கிய சமூகத்தினர் பெருமளவில் சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.  உலகின் ஐந்தாம் பெரிய சமூகத்தினர் என கூறப்படும் சீக்கியர்கள் லங்கர் எனப்படும் சமுதாய சமையல் அறை மூலம் துபாயில் பலருக்கு இலவச சைவ உணவைச் சமைத்து வழங்கி வருகின்றனர்.  தற்போதைய ஊரடங்கு நேரத்தில் இது பல குறைந்த ஊதியம் வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு பெரிதும் உதவி வருகிறது.

இந்நிலையில் சீக்கிய சமூகத்தினர் சில நாட்களாக அனைத்து வயதினர் மற்றும் அனைத்து நாட்டினருக்கும் தங்கள் கோவிலில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர்.  துபாயில் உள்ள சீக்கிய கோவிலில் முதலில் இலவச முகக் கவசம் வழங்கும் போது ஏராளமான மக்கள் அதைப் பெற்றுச் செல்வார்கள்.  தற்போது அதைப் போலவே பலரும் வரிசையில் நின்று இங்கு கொரோனா ஊசிகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

இது குறித்து சீக்கிய கோவில் தலைவர் சுரேந்தர் சிங் காந்தாரி, “நிறைய மக்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசிகள் தேவைப்பட்டாலும் அதைப் போட்டுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.  குறிப்பாக கொரோனா மீட்பு முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அளிக்கப்படாத நிலை உள்ளது.  எனவே நாங்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி மக்களுக்கு உதவுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.