பெங்களூரு
மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். இங்கு நேற்று ஒரே நாளில் சுமார் 42000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 21,400க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47.67 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 4.94 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் ரயில்வே 16 திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கான செலவுகளை ரயில்வே துறையுடன் மாநில அரசு பங்கு போட்டுக் கொள்கிறது. இந்த திட்டங்களுக்கு மாநில அரசு தனது பங்காக ரு.847 கோடி தர வேண்டி உள்ளது. கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாநில நிதி நிலை கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுதி உள்ள கடிதத்தில், “கர்நாடகாவில் மாநில அரசு பங்களிப்புடன் ரயில்வே 16 திட்டங்களை அமைத்து வருகிறது. இதற்கான பாக்கியான ரூ.847 கோடி இன்னும் மாநில அரசு பாக்கி வைத்துள்ளது. மேலும் ,மாநில அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெறவில்லை
இந்த பணத்தை மாநில அரசு உடனடியாக அளிக்காததால் இந்த திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கவும் மாநில அரசு இந்த திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய பங்குத் தொகை பாக்கியான ரூ.847 கோடியையும் விரைவில் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இது கர்நாடக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள், “மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய வரி பங்கு தொகையை வழங்க வேண்டும். மேலும் இயற்கை சீற்றங்களுக்கும் கொரோனா கட்டுப்பாட்டுக்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டை வழங்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தும் அரசியல் காரணங்களுக்காக மாநில அரசிடம் கெடுபிடி செய்யக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.