பாரதீப், ஒரிசா
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய்க் கப்பல் இந்தியா வந்து சேர்ந்தது.
அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தம் இயற்றியது தெரிந்ததே. அதன் படி அமெரிக்கா தனது முதல் எண்ணெய் சப்ளை கப்பலை கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அனுப்பி வைத்தது. அந்தக் கப்பல் ஒரிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்துக்கு திங்கட்கிழமை அன்று வந்து சேர்ந்துள்ளது.
இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 39 லட்சம் பாரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. அதில் முதல் சப்ளை ஆக 16 லட்சம் பாரல் கச்சா எண்ணெய் இந்த கப்பலில் அனுப்பப் பட்டுள்ளது. இந்த கப்பலின் கொள்ளளவு 20 லட்சம் பாரல் ஆகும். கடந்த 1975 ஆண்டில் இருந்து அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கப்பல் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர 58 லட்சம் டன் பெட்ரோல் எரிவாயு வாங்கவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான முதல் கப்பல் ஜனவரி 2018ல் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய அரசு மாநிலங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அமெரிக்காவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மலிவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் அமெரிக்காவில் இருந்து வாங்குமாறு ஆலோசனை அளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி நடந்த மோடி – ட்ரம்ப் சந்திப்பின் போது எரிசக்திகள் பற்றிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அப்போது எரிபொருளை சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. போக்குவரத்து செலவை சேர்த்த பின்னும் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மலிவாக உள்ளதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்ததை ஒட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் இரண்டாவது கப்பல் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப் படுகிறது.