வாஷிங்டன்: ஈரானின் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் உளவுப் பிரிவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், அந்நாட்டின் கணிப்பொறி அமைப்புகள் மீது திடீரென சைபர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா.

சமீபத்தில், அமெரிக்காவின் உளவு டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியப் பிறகு, பதில் தாக்குதல் நடவடிக்கையை பாதியிலேயே நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த சைபர் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று ஈரான் தொடர்பாக ஒரு நேர்மறை அறிக்கையை வெளியிட்டிருந்தார் டிரம்ப். அதில், 38 நபர்களை சுமந்து சென்ற ஒரு அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தாமல் விட்டதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஓமன் நாட்டின் மூலமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க முன்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 150 ஈரானியர்களைக் கொல்லக்கூடிய அமெரிக்க தாக்குதலை அதிபர் டிரம்ப் திடீரென நிறுத்துமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.