சென்னை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விசிக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருக்கக்கூடிய அவரது திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தன.

அதன்படி,  கோயம்பேடில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பா.ஜ.,வினரும், விசிக.,வினரும் ஒரே நேரத்தில் வந்துள்ளனர். இரு தரப்பினரும் சிலைக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் ஏற்படவே மோதலாக மாறியது. சிலைக்கு அருகே இருந்த பா.ஜ.,வின் கொடியை விசிக.,வினர் அகற்றிய தாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ., பிரமுகர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது.

முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கொண்டிருக்கையில் அம்பேத்கர் சிலை சுற்றி வைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கொடிகளை அகற்றியது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக மற்றும் விசிக ஆகிய கட்சியின் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதில் பாஜகவினர் மற்றும் விசிகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். கற்கள், கொடிக்கம்பங்கள், இரும்புக் கம்பிகள் என அனைத்து பொருட்களையும் வைத்து தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் இணை ஆணையர் ராஜேஸ்வரி இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிகவினரும், விசிகவினரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அம்பேத்கர் சிலையை சுற்றியிருந்த இரு கட்சியினரின் கொடிகளும் அகற்றப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.