சென்னை
சென்னை அம்பத்தூர் துணை மின்நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் நிலையத்தை தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் வட்ட அலுவலகத்தின் பின்புறம் அம்பத்தூர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின்நிலையம் 33 கிலோ வாட் திறனுடையது ஆகும். இங்கிருந்து கிருஷ்ணாபுரம், திருவேங்கட நகர், வெங்கடாபுரம், ஒரகடம், விஜயலட்சுமி நகர், ராம் நகர், விநாயகபுரம், வெங்கடேஸ்வரா நகர், பானு நகர், சி.டி.எச் சாலை, சோழபுரம், வரதராஜபுரம், ஆசிரியர் காலனி, காமராஜபுரம், ஐ.சி.எப் காலனி, வானகரம் சாலை, எம்.கே.பி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த துணை மின் நிலையம் மூலம் சுமார் 35 ஆயிரம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களும், 5 உயர் அழுத்த மின் நுகர்வோர்களும் பயனடைகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த துணை மின் நிலையத்தில் 16 மெகா வாட் திறன் கொண்ட 3 மின்மாற்றிகளும், 12 மின் வழித்தட அணைப்பான்களும் உள்ளன. இவற்றில் 12 மின் வழித்தட அணைப்பான்கள் ஆயுட்காலம் முடிந்து விட்டதால், அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த துணை மின் நிலையத்தைச் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், துணை மின் நிலையத்தில் புதிய மின் வழித்தட அணைப்பான்கள் உள்ளிட்ட மின் பாகங்களை மாற்றிட மின்வாரிய உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். நிதி நிலை அறிக்கையில் இதற்காக, 2.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களாக இந்த சீரமைப்பு பணிகளை மின்வாரிய அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடந்த இரு தினங்களாகப் போர்க்கால அடிப்படையில் செய்து முடித்தனர். இந்த துணை மின் நிலையத்தின் புதிய செயல்பாட்டை அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு தலைமை பொறியாளர் எழினி, மேற்பார்வை பொறியாளர் ராகவன், அம்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜய பார்வதி, உதவி செயற் பொறியாளர்கள் விஜயகுமார், தயாநிதி, சரவணன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.