புதுடெல்லி: உலக பணக்காரர்கள் வரிசையில், தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றிருக்கிறார் ‘அமேசான்’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ்.
‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தரவரிசையில், உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில், கடந்த 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தார் ஜெப் பெசோஸ். கடந்த மாதம், இவரை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தைப் பிடித்தார் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனர் எலான் மஸ்க்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி நிலவரப்படி மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார் ஜெப் பெசோஸ். கடந்த 16ம் தேதியன்று, ‘டெஸ்லா’ நிறுவனப் பங்குகள், 2.4% சரிவைக் கண்டதை அடுத்து, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பில் ரூ.33 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கரைந்து போனது.
இதனால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட, ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு ரூ.6,972 கோடி அதிகரித்துவிட்டது. இதையடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார் ஜெப் பெசோஸ். இவரது சொத்து மதிப்பு 16ம் தேதி நிலவரப்படி, ரூ.13.96 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.