நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தின் மூன்றாவது சுற்றில், 15 வயது கோகோ காஃபை வீழ்த்தினார் உலகின் நம்பர் 1 வீராங்கணை நவோமி ஒசாகா.
இந்தப் போட்டி முடிந்து நடந்த விஷயம்தான் பார்வையாளர்களை கவர்ந்தது. பார்வையாளர்களின் இதயத்தை வென்றது என்றும்கூட கூறலாம்.
தோற்றுப்போனதால் மனம் உடைந்த 15 வயது கோகோ அழுதுகொண்டிருக்க, அவரின் அருகில் சென்ற நவோமி ஒசாகா, அவருக்கு ஆறுதல் கூறியதுடன், களத்திலேயே தன்னுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கூறினார்.
“நிஜமாகவா? இல்லை, நான் அழப்போகிறேன்” என்று கோகோ கூற, “தனிமையில் சென்று குளித்துவிட்டு அழுவதைவிட, மக்களிடம் பேசுவது நல்லது” என்று கூறினார் ஒசாகா.
பின்னர் கோகோவின் பெற்றோர் மற்றும் கூட்டத்திடம் பேசிய ஒசாகா, “நீங்கள் ஒரு சிறந்த வீராங்கணையை உருவாக்கியுள்ளீர்கள். நாங்கள் இருவரும் மிகவும் கடினமாக போராடி வெற்றிக்காக முயன்றோம். கோகோவின் திறனும் விளையாட்டும் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது” என்றார்.
“நான் ஆடிய ஆட்டங்களிலேயே இதுவொரு சிறந்த ஆட்டம். இந்த மனநிலையில் கோகோவுடன் விளையாடியதற்கு வருந்துகிறேன். இந்த ஆட்டம் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது” என்று மேலும் கூறினார்.