டில்லி
நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங். அக்கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.
தனது கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளார். தற்போது பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இன்று டில்லியில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமரீந்தர் சிங் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமரீந்தர் சிங், ”பாஜகவுடன் கூட்டணி உறுதியானது. இனி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் தான் பாக்கி. யாரை எந்தத் தொகுதியில் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்பதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களை இதுவரை அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளும் பாஜக இந்த முறை அமரீந்தர் சிங் கட்சியில் தங்களுக்குக் கூடுதல் இடத்தைப் பேரம் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.