மிசோரி: உத்திரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன், தன்மீதான மதவாத குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளார்.

இவர், முஸ்லீம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக இவர்மீது சமூகவலைதளம் உள்ளிட்டவற்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை கடுமையாக மறுத்துள்ள வாசிம் ஜாபர், இந்தக் குற்றச்சாட்டுகள் விளையாட்டுத்தனமானவை என்று மறுத்துள்ளார்.

ரஞ்சிக்கோப்பையில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக உள்ளார் வாசிம் ஜாபர். அவர் கூறியுள்ளதாவது, “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சீரியஸானவை. என்மீது சுமத்தப்படும் மதவாத குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றன.

எனவே, அதுதொடர்பாக விளக்கம் அளிப்பது எனது கடமையாகிறது. உங்கள் அனைவருக்கும் என்னைப்பற்றி தெரியும். நீங்கள் என்னை நீண்டநாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அணியின் வீரர்களை எனது விளையாட்டு நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆட வைக்கிறேன்.

நான் மதவாத சிந்தனை ‍உடையவனாக இருந்திருந்தால், சமாத் ஃபல்லா மற்றும் முகமது நசீம் போன்ற வீரர்கள் அணியில் எப்போதுமே ஆடிக்கொண்டிருந்திருப்பார்கள். புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஜெய் பிஸ்தாவுக்கு நான் கொடுத்த முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். அவரை கேப்டனாக்கவும் நான் விரும்பினேன்.

நான், மதவாத சிந்தனை உடையவனாக இருந்திருந்தால், என்னைப் பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள். ஆனால், நான் ராஜினாமாதான் செய்தேன் என்பதை நினைவில் கொள்ளவும்” என்றுள்ளார் வாசிம் ஜாபர்.