பிக்பாஸ் டீமுக்கு 100 கோடி கேட்டு நோட்டீஸ், “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது சட்டப்படி நடவடிக்கை, நீட் தேர்வுக்கு ஆதரவு…. 

“புதிய தமிழகம்” கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பேச்சு எப்போதுமே சரவெடிதான்.  அவரிடம் partikai.com  இதழுக்காக ஒரு நேர்காணல்…

கிருஷ்ணசாமி

பத்திரிகை டாட் காம்:  

“பிக்பாஸ்” நிகழ்ச்சியை நடத்துவோர் மீதும், பங்குபெற்றிருக்கும் கமல், காயத்ரி மீதும் ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் விட்டிருப்பது ஏன்?

டாக்டர். கிருஷ்ணசாமி:

இது ஜனநாயக நாடு. யார் மனதையும் யாரும் புண்படுத்தக்கூடாது. அதற்கு உரிமை கிடையாது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று சக போட்டியாரை திட்டுகிறார் காயத்ரி. சேரி வாழ் மக்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களை கீழ்த்தரமாக பேசுகிறார் அவர்.  அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் இது குறித்து  மறைமுகமாக காயத்ரிக்கு வக்காலத்து வாங்குகிறார். “தெருவில் இதைவிட மோசமாக பேசுகிறார்கள், ஜாதி இன்னும் நாட்டில் உள்ளது, ஜாதி பற்றி யார்தான் பேசவில்லை.”  என்றெல்லாம் விளக்கம் என்ற பெயரில் ஏதேதோ உளறுகிறார்.

இது எல்லாமே கீழ்த்தட்டு மக்களை அவமதிப்பதுதானே. அதற்காகத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.

ஏழு நாட்களுக்குள் அவர்கள்  முறையாக பதிலளிக்க வேண்டும் , இல்லை என்றால், 3 பேர் மீதும் வழக்கு தொடரப்படும்.  அவர்களை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி போராட்டங்களும் நடத்தும்.

 உங்களுக்கும் கமலுக்கும் அப்படி என்ன மோதல்…? அவர் தனது படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்தபோது எதிர்த்தீர்கள்.. இப்போது டி.வி. நிகழ்ச்சியை தொகுக்கும்போதும் எதிர்க்கிறீர்கள்..?

அவருக்கும் எனக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா..? எங்களுக்குள் தனிப்பட்ட பகை எதுவும் இல்லையே! சமுதாயத்தைச் சீரழிக்கும் அல்லது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் எந்த செயலையும் நான் கண்டிப்பேன்.. எதிர்ப்பேன். அவர் “சண்டியர்” என்று பெயர் வைத்தது சாதி பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் எதிர்த்தேன்.

ஆனால் கமல், சண்டியர் என்று பெயர் வைக்கும் முன்பே, “சண்டியர் வர்றாரு” என்ற பெயரில் ஒரு படம் வெளியானது.  அதன் பிறகு 2014ல், “சண்டியர்” என்ற பெயரிலேயே படம் ஒன்று வெளியானது. ஆனால்  இந்த பெயரை கமல் வைத்தபோதுதானே எதிர்த்தீர்கள்.. அதுதான் ஏன்?

கமல், தன் படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்தபோது நடந்தது வேறு. அதாவது அந்த படத்தின் தலைப்பை போட்டு பக்கத்திலேயே அரிவாளில் ரத்தம் சொட்டுவதாகவும் போஸ்டர்கள் அடித்தார்கள்.  இதனால் குறிப்பிட்ட வகுப்பாரை உசுப்பிவிடும் வேலையை அந்தத் தலைப்பு.. போஸ்டர்கள்கள் செய்கின்றன என்பதால் எதிர்த்தோம். இதில் என்ன தவறு?

கமல் – காயத்ரி

ஒரு தொ.கா. நிகழ்ச்சியில் , “சேரி பிஹேவியர்” என்று கூறியது உங்களை மிகவும் பாதித்திருக்கிறது.  அதே நேரம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது ஒட்டுமொத்த தமிழர்களையும் “பொறுக்கி” என்றார் சுப்பிரமணியம் சுவாமி. சமீபத்தில்கூட, “காவிரி நீருக்காக ஏன் கர்நாடகத்திடம் பிச்சை எடுக்கிறீர்கள்..” என்றார். “தமிழக மீனவர்களின் படகுகளை பிடித்து வைக்கும்படி நான்தான் ராஜபக்சேவிடம் ஆலோசனை கூறினேன்” என்றார். இதற்கெல்லாம் நீங்கள் எதிர்வினை ஆற்றியதாகத் தெரியவில்லையே..

கண்டிக்கத்தான் செய்தேன். நீங்கள் படிக்கவில்லை. நான் என்ன செய்வது…?

சேரி பிஹேவியருக்காக ஆத்திரப்படும் கிருஷ்ணசாமி, வட மாநிலத்தில் தலித் காதலர்களை நிர்வாணப்படுத்திய வீடியோ வந்தபோது கண்டனம் தெரிவிக்கவில்லையே என்றும் ஒரு விமர்சனம் உங்கள் மீது வைக்கப்படுகிறது..

வடமாநிலமாக இருந்தால் என்ன.. தென் மாநிலமாக இருந்தால் என்ன… உலகில் எங்கு இதுபோல நடந்தாலும் கண்டிக்க வேண்டிய விசயம்தான். பலவித பணிகளில் ஈடுபட்டிருப்பதால் குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வு குறித்து கண்டன அறிக்கை வெளியிட சற்று தாமதமாகியிருக்கலாம். அதனால் இது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமா?

நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களை பாதிக்கும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கூறி வரும் நிலையில், நீங்கள் அத் தேர்வை ஆதரிக்கிறீர்களே..!

மருத்துவத்துக்கு இந்தியா முழுதும் ஒரே மாதிரி தேர்வா என்று கேட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.  இந்தியா முழுதும் ஒரே மாதிரியான தேர்வு இருப்பது புதிதில்லையே…  ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ்.  ஆகியவற்றுக்கு தனித்தனி தேர்வு நடந்துகொண்டிருக்கிறா என்ன?

ராணுவத்தில் சேர, பைலட் ஆக, ரயில் டிரைவருக்கு… இதிலெல்லாம் மாநிலத்துக்கு மாநிலம் தனித் தேர்வு வைக்கிறார்களைா என்ன…?

உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்து இருந்தனர். ஆனால் தமிழகத்தில் அதற்கான பாடத்திட்டங்களை மாற்றி இருக்க வேண்டும். அதை மாநில அரசு செய்யவில்லை. ஆக இந்த விசயத்தில் மாநில அரசு மீதுதான் தவறு.

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகள், ராணுவ சேர்க்கைக்கான தேர்வு போன்றவை மத்திய அரசின் நிர்வாகத்தில் இருக்கின்ற. இந்த நிலையில் மருத்துவப்படிப்புக்கான லாகனும் மத்திய அரசு வசம் செல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதே!

நீட் தேர்வு கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுக்க இந்திய அரசியல் சாசனப்படி உரிமை உண்டு.  மாநில அரசுக்கு கட்டுப்பட்டு மத்திய அரசு இல்லை. மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் மாநில அரசு இருக்கிறது.

ஒரு உதாரணம் சொல்கிறேன். தங்க நாற்கர திட்டம் இந்தியா முழுமைக்கும்தான் போட்டார்கள். அதை தமிழக  எல்லையோடு நிறுத்தியிருந்தால் இங்கே ஆளாளுக்கு எதிர்ப்பு காட்டியிருப்பார்கள் அல்லவா? தமிழகத்தை ஏன் ஒதுக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருப்பார்கள் அல்லவா? அப்படி இருக்க.. நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது ஏன்?

சாலை அமைப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பினுள் வரும் கடமை. அதற்காக மாநில அதிகாரத்தில் இருக்கும் ஒரு உரிமையை பறிப்பது சரிதானா என்ற கேள்வி எழாதா..

கடமை, உரிமை என பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் எதார்த்தம் வேறு.. நீட் தேர்வுக்காக  கோச்சிங் சென்டருக்கு  சென்று 5 லட்சம் வரை செலவு செய்த மாணவர்களின் கதி  என்ன என்பதையும் பார்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒருவேளை அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்பட்டால் அப்போது கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்போம்.

“கக்கூஸ்” ஆவணப்படம் – திவ்யபாரதி

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநருக்கு சில காட்சிகளை நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறீர்களே..

ஆமாம்…  தேவேந்திரகுல வேளாளர் இனத்தவர் மலம் அள்ளுவதாக தவறாக அந்த படத்தில் காண்பித்திருக்கிறார் அப்பட இயக்குநர். அதனால்தான் எதிர்த்தோம்.

ஆவணப்படம் என்பது கற்பனையாக எடுப்பதல்ல. எதார்த்தத்தின் பதிவுதான்.. உண்மையைத்தான் எடுத்திருக்கிறோம் என்று அப்படக்குழுவினர் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறதே..

எது உண்மை? தேவேந்திரகுல வேளாளர் இனத்தவர் மலம் அள்ளுவதில்லை. இதையே பிராமணர்கள் மலம் அள்ளுவதாகவோ அல்லது தேவர், வெள்ளாளர் அள்ளுவதாகவோ படம் எடுத்திருந்தால் அந்த இனத்தவருக்கு ஆத்திரம் வராதா?  அந்த படத்தின் இயக்குநர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தவரை தவறாக சித்திரித்திருக்கிறார்.

உங்கள் பார்வையில் தவறாக சித்தரித்தாகவே இருக்கட்டும். ஆனால் அவருக்கு உங்கள் பெயரைச்சொல்லி பலர் போன் செய்து கீழ்த்தரமாக பேசுவதாக திவ்யபாரதி தெரிவித்திருக்கிறாரே..

 ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போது அப்போராட்டத்தை நான் எதிர்த்தேன் என்பதற்காக சமூகவலைதளங்களில் என்னை கீழ்த்தரமாக விமர்சித்தவர்கள் பலர் உண்டு. அதுமட்டுமல்ல.. என் எண்ணுக்கு போன் செய்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசியவர்களும் உண்டு.

அது தவறுதான்.  அப்போது அப்படி நடந்தது என்பதற்காக இப்போது திவ்யபாரதிக்கு நடப்பது சரி என சொல்ல முடியாது அல்லவா..

நான் அப்படிச் சொல்லவில்லையே. என் பெயரைப் பயன்படுத்தி யாரோ போன் செய்கிறார்கள் என்பதற்காக ன் பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் வேண்டுமென்றே என் பெயரைச் சொல்லியிருக்கலாம்.  நான் என்ன செய்யமுடியும் என்றுதான் கேட்கிறேன்.

மனித மலத்தை மனிதரே.. அது யாராக இருந்தாலும்… அள்ளுவது என்பது…

அதையே கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். வேறு கேளுங்கள்..

இந்திய அரசு.. அதாவது மத்திய அரசின் உரிமைகள் குறித்தெல்லாம் பேசுகிறீர்கள். புதிய தமிழகம் கட்சியை அகில இந்திய கட்சியாக.. அதாவது தேசிய கட்சியாக்கும் திட்டம் இருக்கிறதா..?

(சிரிக்கிறார்) அப்படி ஏதும் திட்டமில்லை.

 சமீப காலமாக பா.ஜ.க.வை நோக்கி புதியதமிழகம் நகர்வதாக தோன்றுகிறதே..

அது பார்ப்பவர் பார்வையில் உள்ள தோற்றப்பிழை. நான் ஒன்றும் செய்ய முடியாது!

பேட்டி: டி.வி.எஸ். சோமு