சென்னை:
ரடங்கால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள  சலூன் கடைகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டும், நிதி உதவி வழங்க வேண்டும் என்று சவரத்தொழிலாளர் சங்கம் பிரதமர் மோடி, மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக  சவரத் தொழிலாளர்கள், மிகவும் பாதிக்கப்பட்டு  வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்நிலையில் சவரக் கடைகளை உடனடியாக திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.முனுசாமி பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் நீங்கள் எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கும், தங்களின் ஆளுமைக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்களையும், நன்றியை யும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்ச் 22–ந் தேதி முதல் இன்றைய தேதி வரை ‘லாக் டவுன்’ காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சவரத் தொழிலாளர்கள் அனைவரும் சொல்லொணாத் துயருக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தினசரி குடும்பம் நடத்துவதற்கே முடியாமல் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கி றோம். வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், கிராமப் பகுதிகளில் சவரத் தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் துயரச் சம்பவமும் நடந்திருக்கிறது. எதிர்பாராத இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் சவரத் தொழிலாளர்கள் மிகவும் விரக்தி அடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வாழ்க்கையை மீண்டும் சீரமைக்க, உடனடியாக சவரக் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கைகழுவ (சானிட்டிசைர் கொடுத்து) வலியுறுத்துவோம் டிஷ்யூ பேப்பரை கொடுத்து சுத்தமாக இருக்கச் செய்வோம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 நபர்கள் மட்டுமே அனுமதிப்போம்.
அரசாங்கம் விதித்திருக்கும் நேரப்படியே கடையை திறந்து, கடையை மூடுவோம்.
வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு நம்பரையும் , தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து வைத்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் கடைக்கு யார் யார் வந்து போனார்கள் என்ற விவரத்தை அறிய முடியும்.
அரசு அறிவுறுத்தி இருக்கும் சானிட்டிசைர் மூலம் கைகழுவுதல், முகக் கவசம் அணிந்து இருத்தல்… ஆகிய நிபந்தனைகளை கண்டிப்பாய் பின்பற்றி நடப்போம்.
வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்களின் வீட்டுக்கு நேரில் போய் முடிதிருத்தவும் தயாராக இருக்கிறோம்.
சவரத் தொழிலாளர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு உடனடியாக சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். இதே போல வறுமையிலிருந்து அவர்கள் விடுபட்டு வர நிதி உதவியும் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் முனுசாமி கூறியிருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
‘வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் மட்டுமாவது சவரக் கடைகளை திறந்து பணிப்புரிய அனுமதி யுங்கள்.’ இதன் மூலம் குடும்பம் நடத்த கையில் வருமானமும் இருக்கும். தொழிலாளர்களுக்கு ஓரளவு ஓய்வும் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.