சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடங்கள் பிரித்து கொடுக்க, அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளித்து அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 605 பதவிகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது.
இந்த பதவிகளை அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளுக்கும் பிரிந்து கொடுப்பது தொடர்பாக, கடந்த 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்ய அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இடங்களை பிரித்து கொள்ளலாம். இடம் பிரிப்பிதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் தவித்து கொள்ளுமாறு அதிமுக அறிவுறுத்தி உள்ளது.