சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலியுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தங்களது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது,   டிடிவி தினகரனின் அமமுக கட்சி  இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும், பதிவு செய்யப்படாத எந்தவொரு கட்சியையும் நாங்கள் கட்சியாக அங்கீகரிக்க முடியாது என்று கூறியது.

அதையடுத்து வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,  உச்சநீதிமன்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து  பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என்று  தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.

டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். அப்போது,  அமமுக கட்சியை ஆணையத்தில் பதிவு செய்ய தயார் என்று கூறியவர், குக்கர் சின்னம் ஒதுக்கவிட்டால் அமமுக.வுக்கு பொது சின்னம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால்.  டிடிவி தினகரன் தரப்புக்கு தனி தனி சின்னம்தான் தர முடியும்; பொது சின்னம் தர முடியாது  தேர்தல் ஆணையம் முரண்டு பிடித்தது. அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சைகளாகவே கருதப்படுவார்கள் என்றும் வாதிட்டது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என்று கூறினார்.

ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதி மன்றம் கூறியது.

டிடிவி அணியின் வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சைகளாகவே கருதப்படுவார்கள் என்ற நீதி மன்றம்,  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் 59 வேட்பாளர்களுக்கும்  பொதுவான ஒரே சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்  என்றும்  தெரிவித்து உள்ளது.