அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் டிரான்ஸ்மிஷன் தனது சென்னை உற்பத்தி வசதியை 763 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்துவதற்கான முறையான ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன் கையெழுத்திட்டுள்ளது.
இதை தமிழக தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விரிவாக்கம் 2025 ஆம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி டேவிட் எஸ் கிரேசியோசி, “உலகளாவிய தேவை அதிகரிப்பதால் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க $100-மில்லியன்-க்கும் அதிகமான முதலீடு செய்ய அலிசன் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்துள்ளது.
அதில் கிட்டத்தட்ட பாதி 2025 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டார். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய வசதி 2026 இல் செயல்படத் தொடங்கும் என்றும் 2027 இல் முழு உற்பத்தியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக” கூறினார்.
2010ம் ஆண்டு சென்னை ஓரகடத்தில் நிறுவப்பட்ட இந்த உற்பத்தி தொழிற்சாலை பிராந்திய தலைமையகமாக செயல்படுகிறது.
வணிக மற்றும் ராணுவ வாகனங்களுக்கான தானியங்கி டிரான்ஸ்மிஷன்களை உற்பத்தி செய்து வரும் இந்நிறுவனம், இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து, தாழ் தள நகரப் பேருந்துகளுக்கு முழு தானியங்கி பரிமாற்றத் தொழில்நுட்பத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.