யாருடன் கூட்டணி? கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை

Must read

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில், திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.  இந்த அணிகள், மற்ற கட்சிகளை தங்களது அணியில் சேர்க்க தீவிரமாக திரைமறைவு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவை இணைவது உறுதியாகி உள்ள நிலையில், தேமுதிக மட்டும் பிடிகொடுக்காமல் நிபந்தனைகள் விதித்து வந்தது.

அதேவேளையில் தேமுதிகவை தங்களுக்கு அணிக்கு கொண்டு வர பாஜக, அதிமுக தலைமை முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், தேமுதிகவின் அதிரடி நிபந்தனைகளை கேட்டு ஆ…வென்று வாயை பிளந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து தேமுதிகவை கைகழுவி விட  திமுக, அதிமுக கூட்டணிகள் முடிவு செய்தன. இதனால், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காவிட்டால் தேமுதிகவின் எதிர்காலம் பாழாகிவிடும் என்றும், கடந்த தேர்தலின்போது தேமுதிக டெபாசிட் கூட வாங்கவில்லை என்பதை கட்சி நிர்வாகிகள் விஜயகாந்திடம் எடுத்துக்கூறி பேசியதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக தேமுதிக தனது  நிபந்தனைகளை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இருந்தாலும், அவர்கள் கேட்ட தேர்தல் செலவுதொகை தர திமுக ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதிமுக பாஜக கூட்டணி ஓகே சொன்னதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில்,  தே.மு.தி.க. கட்சி அலுவலகத் தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்கஅதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாகவும், இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் வரும் 3ந்தேதி கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தமுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில்,  ஏற்கனவே பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமககவுக்கு 7 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரசுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்ட உள்ளது. மீதமுள்ள 27 தொகுதிகளில் புதிய தமிழகம், தமாகாவுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல மீதமுள்ள 25 தொகுதி களில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, 20 தொகுதிகளில் மட்டும் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது.

More articles

Latest article