கோயம்புத்தூர்:

100% பெண் தொழிலாளர்களுடன் கோவை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.


கோவை அடுத்த மோப்பேரிபாளையம் கிராமத்தில் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம், வீட்டு உபயோக குடிநீர் பம்ப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு 65 பெண்கள் மோட்டார் பம்ப் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 19 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் இங்கு வேலை பார்க்கின்றனர்.

ஆண்டுதோறும் இவர்கள் 5 லட்சம் பம்புகளை தயாரிக்கின்றனர். உற்பத்தி நிராகரிப்பு 20 ஆயிரம் பம்புகளுக்கு குறைவாகவே உள்ளன.

ஒரு பம்பை 17.25 வினாடிகளில் அசெம்பிள் செய்கின்றனர். இந்த நேரத்தை 10 வினாடிகளாக குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சாதனை கின்னஸுக்கு இணையான லிம்கா புத்தகத்திலும் கடந்த 2014-ம் ஆண்டு இடம் பெற்றுள்ளது.

அந்த நேரம் 60 வினாடிகளில் அசெம்பில் செய்த பம்பை, 20 வினாடிகளாக குறைத்திருந்தனர்.

பெண்கள் மட்டுமே பணியாற்றும் இந்த தொழிற்சாலையை கடந்த 2011-ம் ஆண்டு கிர்லோஸ்கர் நிறுவனம் தொடங்கியது.

உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கு மிகக் குறைவே. இதனை முறியடிக்க பெண்கள் மட்டுமே பணியாற்றும் குடிநீர் பம்ப் தயாரிப்பு தொழிற்சாலை கோவையில் தொடங்கியது கிர்லோஸ்கர்ஸ் பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனம்.

இன்று தன் லட்சியத்தை எட்டி, பெண்களுக்கும் தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.