டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதை தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ்களை தயாராக வைத்திருக்கவும், உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள் வைக்கவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகள், சந்தைகள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பரிசோதனை நடத்தி ஆய்வு செய்யவேண்டும். குறிப்பாக மளிகைக் கடைகள் , காய்கறிக் கடைகள், அதில் பணியாற்றுவோர், பிற வியாபாரிகள் பல தரப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பவர்கள்.
அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஐசிஎம்ஆர் விதிமுறைகள்படி கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் வீடுகளில் பரிசோதனை செய்து, நோய்த் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இணை நோய்கள் இருப்பவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் மத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.